திருமலை: திருப்பதி கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யில் கலப்படம் செய்த சம்பவத்தில் கைதான அறங்காவலர் குழு முன்னாள் தலைவரின் உதவியாளருக்கு ரூ.50 லட்சம் லஞ்சம் வழங்கப்பட்டிருப்பதாக சிஐடி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிப்பதற்கான நெய்யில் கலப்படம் தொடர்பான வழக்கில் திருமலை திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டியின் உதவியாளர் அப்பண்ணா கடந்த 29ம் தேதி இரவு கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்தது.
இதுதொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சிஐ.டி. தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: திருப்பதி கேயிலுக்கு நெய் சப்ளை செய்யும் டெண்டரில் பிரீமியர் அக்ரி புட்ஸ் நுழைந்தது. அவர்கள் கிலோவிற்கு ரூ.138 அதிக விலை நிர்ணயித்தனர். போட்டி இல்லாததால், அவர்களே தேர்வு செய்யப்பட்டனர். இதற்காக அப்பண்ணாவுக்கு அந்த நிறுவனம் ரூ.50 லட்சம் வரை லஞ்சம் கொடுத்துள்ளது தொடர்ந்து 2024ம் ஆண்டு டெண்டரில் போலோ பாபா நிறுவனம், வைஷ்ணவி டெய்ரி நிறுவனம் வழியாக, திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி பெயரில் டெண்டர் பெற்று நெய் சப்ளை செய்ய தொடங்கியது.
ஆனால் அவர்கள் கலப்பட நெய் சப்ளை செய்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட அப்பண்ணாவின் வங்கி பரிவர்த்தனைகளை சிறப்பு விசாரணை குழு ஆய்வு செய்து முறைகேடுகளை கண்டறிந்துள்ளது. நெய் கலப்பட வழக்கில் சதித்திட்டத்தை மேலும் கண்டறிய அப்பண்ணாவை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு முடிவு செய்துள்ளது.
