பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பல கோடி மோசடி: விரைவில் குற்ற பத்திரிகை தாக்கல்

 

புதுடெல்லி: பிரதமரிடம் வீடு கட்டும் திட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடி தொடர்பாக ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர் மீது விரைவில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது.

அரியானாவின்,குருகிராமை சேர்ந்த ஓஷன் செவன் பில்ட்டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை கடந்த மாதம் 13ம் தேதி ஓஷன் செவன் பில்ட்டெக்கின் நிர்வாக இயக்குனர் சுவராஜ் சிங் யாதவை கைது செய்தது.

இது குறித்து வட்டாரங்கள் கூறுகையில்,பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டின் விலை ரூ.26.5 லட்சம். ஆனால், வீடு வாங்க பணம் செலுத்திய முன் பதிவு செய்தவர்களிடம் போலியான காரணங்களை கூறி ஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டு வேறு நபர்களுக்கு வீட்டுக்கு ரூ.50 லட்சம் வரை விற்று உள்ளனர். இதன் மூலம் ரூ.222 கோடி வசூலித்துள்ளனர். விரைவில் ஓஷன் பில்ட்டெக்கின் நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனர்கள் மீது குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தன.

Related Stories: