பாலியல் இச்சைக்காக சிறுமியின் கையை பிடித்து இழுத்ததால் ‘போக்சோ’: குற்றவாளியின் தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்

நாக்பூர்: பாலியல் நோக்கத்துடன் சிறுமியின் கையைப் பிடிப்பது பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கடுமையான குற்றமாகும் என்று மும்பை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 25 வயது இளைஞர் ஒருவர், 17 வயது சிறுமி ஒருவரிடம் பாலியல் இச்சைக்கு இணங்கும்படி வற்புறுத்தி பண ஆசை காட்டியதுடன், அச்சிறுமியின் கையைப் பிடித்து அத்துமீறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், அந்த இளைஞர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து அந்த இளைஞர் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிவேதிதா பி. மேத்தா, மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். அப்போது, ‘பாலியல் இச்சைக்கு அழைப்பு விடுத்து பண ஆசை காட்டுவதும், அதற்காகச் சிறுமியின் கையைப் பிடித்து இழுப்பதும் போக்சோ சட்டத்தின் பிரிவு 7ன் கீழ் பாலியல் வன்கொடுமை குற்ற வரம்பிற்குள் வரும்’ என்று நீதிபதி விளக்கமளித்தார். வெறும் உடல் ரீதியான தீண்டலைத் தாண்டி, குற்றவாளியின் உள்நோக்கமே முக்கியமானது என்று சுட்டிக்காட்டிய நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்தது. மேலும், குற்றத்தின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு நன்னடத்தை விதிகளின் கீழ் சலுகை வழங்கவும் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Related Stories: