புதுடெல்லி: கட்சி தாவல் சட்டத்தில் திருத்தம் செய்ய கோரி காங்கிரஸ் எம்பி மனிஷ் திவாரி மக்களவையில் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்துள்ளார். சண்டிகர் தொகுதி காங்கிரஸ் எம்பி மனிஷ் திவாரி கட்சி தாவல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரக்கோரி குரல் கொடுத்து வருகிறார். மக்களவையில் உறுப்பினர்கள் சுதந்திரமான நிலையை எடுப்பதற்கான உரிமை வழங்க கோரி கடந்த 2010 மற்றும் 2021ல் மனிஷ் திவாரி தனிநபர் மசோதா கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில், கட்சி தாவல் தடை சட்டம் உறுப்பினர்களின் சுதந்திரத்தை பறிப்பதாகவும், கட்சி கொறடா உத்தரவுகள் உறுப்பினர்களை அச்சத்தில் வைப்பதாகவும் அவர் கூறினார்.
எனவே கட்சி தாவல் தடை சட்டத்தில் திருத்தம் கோரி கடந்த 5ம் தேதி மக்களவையில் தனி நபர் மசோதா தாக்கல் செய்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு மற்றும் பண மசோதாக்கள் போன்ற முக்கிய விஷயங்களை தவிர இதர விவகாரங்களில் உறுப்பினர்கள் சுதந்திரமான நிலையை எடுப்பதற்கும், கட்சிதாவல் தடை சட்டத்தின் கீழ் பதவியை பறிக்காமல் இருப்பதற்காக சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
