கோவாவில் நடந்தது தீ விபத்தல்ல… கொலை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பனாஜி: கோவாவில் 25 பேர் பலியான தீ விபத்து விபத்து அல்ல கொலை என்று ராகுல் காந்தி கூறியுள்ள நிலையில், இது தொடர்பாக விடுதி மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவா மாநிலம் வடக்கு கோவாவின் அர்போரா பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த ‘பிர்ச் பை ரோமியோ லேன்’ என்ற இரவு விடுதியில், நேற்றிரவு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் 4 சுற்றுலாப் பயணிகள் உட்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ‘இது வெறும் விபத்து அல்ல, இது ஒரு கொலை; பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தின் கிரிமினல் தோல்வியே இதற்கு முழுக் காரணம்’ என்று ஆவேசமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், கோவாவில் உள்ள அனைத்து விடுதிகளிலும் பாதுகாப்புத் தணிக்கை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்ததுடன், நிவாரண நிதியுதவியையும் அறிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தைப் பார்வையிட்ட கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், ‘இந்த விபத்து குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது; விதிமீறலில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் விடுதி நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக விடுதி மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: