மும்பை: கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகை தீபிகா கக்கர், தனது உடல் தோற்றத்தைப் பற்றிக் கவலைப்படாமல் ஆரோக்கியத்தையே முக்கியமாகக் கருதுவதாகத் தெரிவித்துள்ளார். பிரபல சின்னத்திரை நடிகை தீபிகா கக்கருக்கு கடந்த மே மாதம் 2ம் நிலை கல்லீரல் புற்றுநோய் இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் அவருக்கு 14 மணி நேரம் மிக நீண்ட அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்போது மருத்துவர்கள் அவருடைய கல்லீரலில் பாதிக்கப்பட்டிருந்த 22 சதவீதப் பகுதியை வெற்றிகரமாக அகற்றினர். அதிர்ஷ்டவசமாகப் புற்றுநோய் செல்கள் மற்ற உறுப்புகளுக்குப் பரவாமல் இருந்ததால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டினார்.
தற்போது புற்றுநோய் மீண்டும் வராமல் தடுப்பதற்காக, அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வாய்வழி மருத்துவச் சிகிச்சையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இந்த சிகிச்சையின் பக்க விளைவாகக் கடும் முடி உதிர்வு மற்றும் தைராய்டு பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்தாலும், அவர் மன உறுதியுடன் இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘உடல் எடை அதிகரிப்பதோ அல்லது நான் அழகாகத் தெரியவில்லை என்பதோ எனக்குப் பெரிய குறையே இல்லை; என் கவனம் முழுவதும் என் உடல்நலத்தின் மீதும், என் மகன் ருஹான் மீதும் மட்டுமே உள்ளது’ என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார். சிகிச்சையின் வலியையும், மன அழுத்தத்தையும் தாண்டி, தனது கணவர் ஷோயப் இப்ராஹிமின் முழுமையான ஆதரவோடு இந்த நோயை எதிர்த்துப் போராடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
