அந்த புண்ணிய நதி வேறொன்றும் இல்லை. பம்பா நதிதான்… கேரளாவின் பெரியாறு, பாரதப்புழாவுக்கு அடுத்ததாக மூன்றாவது பெரிய நதி என்ற பெருமையை பெற்றது பம்பா நதி. சுமார் 176 கிமீ நீளம் ஓடக் கூடியது. மலையாள பூமியை வளம் கொழிக்க வைக்கும் பம்பா நதியைக் கண்டதும் ஐயப்ப பக்தர்களின் மனம் ஆனந்தம் அடையும். அதாவது, ஒரு தாயின் ஸ்பரிசத்திற்கு நிகரான உணர்வு அது.
ஏன் தெரியுமா? மகிஷியை வீழ்த்த சிவன் – விஷ்ணுவால் அவதரிக்கப்பட்ட மணிகண்டன், குழந்தையாக தோன்றிய இடம் பம்பா நதி பகுதிதானே… குழந்தையாய், சிறுவனாய் மணிகண்டனாய் சுற்றி வந்த இடம் அல்லவா? சபரிமலை பயணம் எங்கிருந்து, துவங்கினாலும் பம்பா நதியே தரிசனத்துக்கான முக்கிய ஆரம்பப் புள்ளியாகும். அந்த வகையில் ஐயப்ப சுவாமியின் மனநிலையிலும் பக்தர்களுக்கு ஸ்பெஷலான இடம் இது.
ஆயிரம், லட்சம், கோடி என கூடிக்கொண்டே போகும் பக்தர்கள், பம்பா நதியை அடைந்தாலே சபரிமலை பயணத்தின் பாதி நோக்கம் நிறைவேறி விடும். காசிக்கு ஒரு கங்கை எப்படியோ, அதுபோலத்தான் பம்பா நதியும் போற்றப்படுகிறது. இதை தட்சிணகங்கை என்றும் அழைக்கின்றனர். பம்பா நதிக்கு மேலும் சில பெருமைகள் இருக்கின்றன. அதை நாளை பார்க்கலாமா? தரிசனம் தொடர்வோம்
