திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. முந்தைய வருடங்களை விட இந்த சீசனில் வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தினமும் சராசரியாக 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக புல்மேடு வழியாக தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று காலை 8.20 மணியளவில் 18ம் படிக்கு அருகே நெய் தேங்காய்களை எரிக்கும் ஆழி அருகே உள்ள ஆலமரத்தில் திடீரென தீ பிடித்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு தரிசனத்திற்காக காத்துக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனடியாக அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
இதுகுறித்து அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவவிடாமல் அணைத்தனர்.
மரத்தில் பொருத்தப்பட்டிருந்த எல்இடி விளக்கிலிருந்து மின்கசிவு ஏற்பட்டதால் இந்த தீ விபத்து நிகழ்ந்தது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சிறிது நேரத்திற்கு பக்தர்கள் 18ம் படி ஏற அனுமதிக்கப்பட வில்லை.
