புதுடெல்லி: இந்தியாவின் தேசிய பாடலான வந்தே மாதரம் கடந்த 1875ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி பங்கிம் சட்டர்ஜியால் வங்கமொழியில் எழுதப்பட்டு, ஜாதுநாத் பட்டாச்சார்யாவால் இசையமைக்கப்பட்டது. பின்னர் கடந்த 1896ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ரவீந்திரநாத் தாகூரால் பாடப்பட்ட பிறகு இந்த பாடல் மிகவும் பிரபலமடைந்தது. அதைத்தொடர்ந்து 1950ம் ஆண்டு இது தேசிய பாடலாக ஏற்கப்பட்டது.
இந்திய சுதந்திர இயக்கத்துக்கு உத்வேகம் அளித்த வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கடந்த 7ம் தேதி நாடு முழுவதும் பிரதமர் மோடி கொண்டாட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, “வந்தே மாதரம் பாடலின் ஆன்மாவின் ஒருபகுதியாக இருந்த சில முக்கிய வரிகளை கடந்த 1937ம் ஆண்டு காங்கிரஸ் நீக்கியது பிரிவினைக்கு வித்திட்டது” என தெரிவித்திருந்தார். மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவையில் வந்தே மாதரம் பாடல் குறித்த சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது. இன்று பகல் 12 மணிக்கு பிரதமர் மோடி மக்களவையில் இந்த சிறப்பு விவாதத்தை தொடங்கி வைக்கிறார். பின்னர், ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் , காங்கிரஸ் துணைத்தலைவர் கவுரவ் கோகோய், பிரியங்கா காந்தி மற்றும் பல ஒன்றிய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த விவாதத்துக்காக ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 3 மணி நேரம் உள்பட மொத்தம் 10 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விவாதத்தில் வந்தே மாதரம் பாடல் குறித்த பல்வேறு முக்கியமான மற்றும் அறியப்படாத அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை செவ்வாய்கிழமை மாநிலங்களவையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த சிறப்பு விவாதத்தை தொடங்கி வைக்கிறார். மாநிலங்களவை பாஜ குழு தலைவர் ஜே.பி.நட்டாவும் விவாதத்தில் பங்கேற்க உள்ளார்.
* எஸ்ஐஆர் குறித்து விவாதம்
கடந்த 1ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் இரண்டு நாள் நடவடிக்கைகள், எஸ்ஐஆர் குறித்த எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக மீண்டும், மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் மக்களவையில் நாளை மற்றும் புதன்கிழமை(டிச. 9 & 10) ஆகிய தினங்களில் எஸ்ஐஆர் உள்பட தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதம் நடைபெற உள்ளது. மாநிலங்களவையில் புதன், வியாழன் கிழமைகளில்(டிச.10,11) தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதம் நடைபெற உள்ளது. மக்களவையில், நடக்கும் விவாதத்தில் காங்கிரஸ் சார்பில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நாளை பேச உள்ளார். மாநிலங்களவை விவாதத்தில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே பேசுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
