வைகுண்டம் வட்டாரத்தில் கிராமசபை சிறப்பு கூட்டம் திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்கள் கோரிக்கை நிறைவேற்றம்

வைகுண்டம், ஜன. 23:  தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பேட்மாநகரம், பேரூர், முக்காணி உள்ளிட்ட வைகுண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளில் கிராமசபை  சிறப்பு கூட்டம் நடந்தது. கூட்டங்களில் பங்கேற்ற கனிமொழி எம்.பி., மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். இதில் மூலக்கரை ஊராட்சி பேட்மாநகரத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய  பெண்கள், ஆயத்த ஆடை தொழிலகம் அமைக்கவேண்டும். மாசில்லா தாமிரபரணி குடிநீர் வழங்க வேண்டும். தன்னூத்து,  மூலக்கரை கிராமத்தில் குடிநீர், சாலை, சமுதாய நலக்கூடம், நூலகம் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பேரூரில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் மருதூர் கீழக்கால்வாய், பேரூர் குளத்தை தூர் வாரி சீரமைக்கவேண்டும். அனைத்து வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தினர். மகளிருக்கான சுகாதார வளாகம், உரம் விலையை குறைத்தல், வேளாண் அறுவடை எந்திரங்கள் வாங்கிதருதல் போன்ற கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.  இவற்றுக்குப் பதிலளித்து கனிமொழி எம்பி பேசுகையில், ‘‘திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்களின் அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றித்தரப்படும். மனு கொடுத்தாலே போதும் உடனுக்குடன் நிறைவேற்றப்படும். சிறுபான்மையினருக்கு எப்போதும் பாதுகாப்பாகவும், உறுதுணையாகவும் பாதுகாப்பாக இருக்கும். முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களுக்கு எதிராக மத்திய பாஜ அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எந்த நிலையிலும் திமுக கடுமையாக எதிர்க்கும். தோல்வி பயம் காரணமாகவே உள்ளாட்சித்தேர்தலை நடத்த அதிமுக அரசு தயங்குகிறது. எனவே, மக்கள் விரோத ஆட்சிகளை விரைவில் அகற்றி மக்களின் தேவைகளை நாங்கள் உறுதியாக நிறைவேற்றித் தருவோம்’’ என்றார். கூட்டங்களில் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகபெருமாள், வைகுண்டம் ஒன்றியச் செயலாளர் கொம்பையாபாண்டியன், ஊராட்சி செயலாளர்கள் சுப்புராஜ், முத்துராமலிங்கம், ஒன்றிய துணைச்செயலாளர் சண்முகவேல், வர்த்தக அணி தெற்கு மாவட்ட அமைப்பாளர் மகேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் காவல்காடு சொர்ணகுமார், விவசாய அணி கதிரேசன் உள்ளிட்ட நிர்வாகிகள், சார்பு அணியினர், தொண்டர்கள், கிராம மக்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

Related Stories: