சூரம்பட்டி அணைக்கட்டில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்பு

ஈரோடு, செப். 5: ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டில் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளதால் தண்ணீர் ஓட்டம் தடைபடுவதோடு, மாசு படிந்து வருகின்றது. இதனால் இவை அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். பெரும்பள்ளம் ஓடையின் குறுக்கே சூரம்பட்டி வலசு பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. கீழ்பவானி வாய்க்கால் கசிவுநீர் திட்டம் மற்றும் மழை நீர் ஆதாராத்தை அடிப்படையாக கொண்ட கட்டப்பட்ட இந்த அணைக்கட்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலுக்கு தண்ணீர் பாசனத்திற்கு சென்று வருகின்றது.

இதன் மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது. தற்போது கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அதன் கசிவு நீர் வரத்து சூரம்பட்டி அணைக்கட்டுக்கு வரத்தொடங்கி உள்ளது. இதுதவிர அவ்வப்போது பெய்து வரும் மழைநீரும் ஓடையில் வருவதால் அணைக்கட்டிற்கான நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் அணைக்கட்டின் பெரும்பகுதியானது ஆகாயத்தாமரையால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தண்ணீர் ஓட்டத்தினை தடுத்து வருகின்றது.

மேலும் அணைக்கட்டில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரையால் தண்ணீர் மாசு படிந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

The post சூரம்பட்டி அணைக்கட்டில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்பு appeared first on Dinakaran.

Related Stories: