ஈரோட்டில் சிறுவர்கள் ஓட்டி வந்த 3 பைக் பறிமுதல் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்க பரிந்துரை

ஈரோடு, ஜூலை 4: ஈரோட்டில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஓட்டி வந்த 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு, தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்க வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ஈரோடு மாவட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பலர் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முன்பாகவே பைக், கார்களை ஓட்டி வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுத்து நடவடிக்கை எடுக்க எஸ்பி ஜவகர் போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதன்பேரில், ஈரோடு தெற்கு போலீசார் நேற்று முன்தினம் குமலன்குட்டை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதில், அவ்வழியாக அடுத்தடுத்து 3 பைக்கில் வந்த சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் 17 வயதுடையவர்கள் என்பதும், 3 பேரும் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரிடம் இருந்து பைக்குகலை பறிமுதல் செய்தனர். பின்னர், ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: புதிய சட்ட விதிகளின் படி சிறுவர், சிறுமியர் மோட்டார் வாகனம் ஓட்டினால் பெற்றோர் அல்லது வாகன உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் எஸ்பி உத்தரவின் பேரில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்க தணிக்கை செய்கிறோம். இதில், ஈரோட்டில் 3 சிறுவர்கள் ஓட்டி வந்த பைக் பறிமுதல் செய்து வட்டார போக்கு வரத்து அலுவலர் நடவடிக்கைகாக அனுப்பி வைத்துள்ளோம். வட்டார போக்கு வரத்து அதிகாரி வாகன உரிமையாளருக்கோ அல்லது வாகனம் ஓட்டி வந்த சிறுவர்களின் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்க பரிந்துரை செய்துள்ளோம். மாணவ, மாணவிகள் பள்ளிக்கு மோட்டார் வாகனங்களை ஓட்டிக்கொண்டு வர அனுமதிக்கக்கூடாது என அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அதையும் மீறி வருபவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கவும் என பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுள்ளோம். ஈரோடு மாநகரில் தொடர்ந்து சோதனைகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ஈரோட்டில் சிறுவர்கள் ஓட்டி வந்த 3 பைக் பறிமுதல் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்க பரிந்துரை appeared first on Dinakaran.

Related Stories: