ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு

 

ஈரோடு, ஜூன் 28: ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஈரோடு மாநகரில் பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு முக்கிய பகுதியாகும். இந்த சந்திப்பில் காந்திஜி சாலை, மீனாட்சி சுந்தரனார் சாலை, திருவேங்கடசாமி வீதி சாலை, திருமகன் ஈவெரா சாலை, நேதாஜி சாலை ஆகிய 5 சாலைகளில் இணைகின்றன.

மேலும், இப்பகுதியில் ஜவுளி சந்தை, பள்ளிகள்,மாநகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், எஸ்பி அலுவலகம், வங்கிகள், வணிக நிறுவனங்கள், கடை வீதிகள் உள்ளதால் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில், பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள் நடந்து வந்தது.

இதில், புதிதாக 5 சாலைகளிலும் பாதசாரிகள் நடந்து செல்ல ஏதுவாக ஜிப்ரா கிராசிங்குகள்(நடைபாதை) அமைக்கப்பட்டது. இந்த ஜிப்ரா கிராசிங்கில் சிக்னல் விழுந்ததும், வாகனங்கள் வந்து நிறுத்தி கொள்வதால் நடந்து செல்லும் பாதசாரிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்ட போலீசார் நேற்று வாகன ஓட்டிகளுக்கு ஜிப்ரா கிராசிங் முக்கியத்துவம் குறித்தும், அதில் வாகனங்கள் நிறுத்தக்கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இனி வரும் நாட்களில் ஜிப்ரா கிராசிங்கில் நிறுத்தும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

The post ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: