கோவை-பெங்களூர் வந்தே பாரத் ரயில் சேவைக்கு பயணிகளிடம் வரவேற்பு குறைவு

 

கோவை, டிச. 5: கோவையில் இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்த 30-ம் தேதி துவக்கி வைத்தார். இருப்பினும், ரயில் சேவை ஜனவரி 1-ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் கோவையில் இருந்து தினமும் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி வழியாக காலை 11.30 மணிக்கு பெங்களூருவை சென்றடைகிறது. மேலும், பெங்களூருவில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் இரவு 8 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடைகிறது.

இந்த ரயிலில் பயணிக்க சாதாரண சொகுசு பெட்டியில் பயணிக்க ஒரு நபருக்கு ரூ.1,025-ம், சிறப்பு சொகுசு பெட்டியில் ஒரு நபருக்கு ரூ.1,930-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை துவங்கப்பட்ட நிலையில், ரயிலுக்கு பயணிகள் மத்தியில் பெரிய வரவேற்பு இல்லாமல் உள்ளது. இந்த ரயிலில் உள்ள 540 இருக்கைகளில், 350 இருக்கைகளுக்கு மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலான இருக்கைகள் காலியாக உள்ளன.

இதற்கு முக்கிய காரணம் ரயில் அதிகாலை 5 மணிக்கு புறப்படுவதும், ரயிலின் வேகம் குறைவாக இருப்பதும் காரணமாக கூறப்படுகிறது. தவிர, சாதாரண ரயில்கள் 7 மணி நேரத்தில் பெங்களூர் சென்றடைகிறது. இந்த ரயில்களில் ரூ.265, ரூ.160-க்கு முன்பதிவு டிக்கெட்கள் கிடைக்கிறது. இந்த கட்டணத்தைவிட மூன்று மடங்கு கட்டணம் உள்ள வந்தே பாரத் ரயில் சாதாரண ரயிலைவிட ஒரு மணி நேரம் மட்டுமே முன்கூட்டி பெங்களூர் செல்கிறது. இதனால், ரயில் பயணிகள் சாதாரண கட்டண ரயிலில் பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால், கோவை-சென்னை இடையே காலை 6 மணிக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் வேகமாக இருப்பதால் மவுசு இருந்து வருகிறது. இந்த ரயிலில் உள்ள இருக்கைகள் தினமும் நிரம்பி விடுகிறது. இந்நிலையில், கோவை-பெங்களூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலின் வேகத்தை அதிகரிக்க வேண்டும். முக்கியமாக அதிகாலையில் 5 மணிக்கு இயக்கப்படும் ரயிலை, காலை 6 மணி அல்லது 7 மணிக்கு இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோவை-பெங்களூர் வந்தே பாரத் ரயில் சேவைக்கு பயணிகளிடம் வரவேற்பு குறைவு appeared first on Dinakaran.

Related Stories: