இரண்டு மூன்று நாட்கள் ஒத்திகை பார்த்துவிட்டு ஆக்சன் சொன்னதும் முழுவதுமாக நடித்துக் காட்டிவிட்டார் முதல்வர் விஜய்: டைரக்டராக சபாநாயகர்

* அசிஸ்டன்ட் டைரக்டர்களாக அமைச்சர்கள் சட்டசபை நிகழ்வுகளை உரித்துத் தொங்கவிட்ட உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் விவாதம் மீதான முதல்வரின் பதில் உரையில், முதல்வர் விஜய் பேசுகையில், தவறான குற்றச்சாட்டுகளை கூறினார். உடனே எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பாயிண்ட் ஆப் ஆர்டரில் பேச அனுமதி கேட்டார். அதற்கு சபாநாயகர் அனுமதியளிக்கவில்லை. அதனால், உதயநிதி தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதன்பின் சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

முதல்வர் விஜய் ஒரு ஸ்கிரிப்டை எடுத்து வந்து பேசினார். அந்த ஸ்கிரிப்ட்டை அவர் பேசி முடிக்கும் வரை நான் யாருக்கும் பதில் சொல்லமாட்டேன் என்ற தொனியில், அந்த சீனின் மொத்த டயலாக்கையும் பேசி முடிக்கும் வரை யாரும் கட் சொல்லக்கூடாது என்ற மனநிலையில், ஷூட்டிங் போனால் எப்படி இருப்பாரோ அதேபோல் சட்டமன்றத்தை ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிக் காட்டியுள்ளார். நேற்று நான் அவ்வளவு கேள்வி கேட்டும் ஒரு முறை கூடப் பதில் சொல்ல வாயை திறக்காத முதலமைச்சர் மொத்த டயலாக்கையும் ஒப்பித்து இன்றைக்கு பேசியிருக்கிறார்.

தொடர்ந்து செய்தியாளர்களும் அவரிடம் கேள்வி கேட்க எவ்வளவோ முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கும் பதில் சொல்வதில்லை, சட்டமன்றத்தில் எங்களுக்கும் பதில் சொல்வதில்லை. ஒரு முதலமைச்சராக அவரிடம் நாங்கள் எதிர்பார்ப்பது நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கும், மக்களுடைய கேள்விகளுக்கும் பொறுப்பாக பதில் அளிக்க வேண்டும். அதைத்தான் நாங்களும் மக்களும் எதிர்பார்ப்பது. ஆனால், என்ன நடந்தாலும் திமுக மீது பழிபோடுவதையே இந்த அரசு வழக்கமாக வைத்திருக்கிறது.

நேற்று நான் பல கேள்விகளை முன் வைத்தேன், சிலவற்றை மீண்டும் கேட்க விரும்புகிறேன். ஆளுநர் சட்டசபைக்கு வரும்போது முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சி முடியும்போது இறுதியாக தேசிய கீதமும் பாடுவதும்தான் மரபு. ஆனால், இந்த முறை ஆளுநர் வந்தபோது மரபு மீறப்பட்டு இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டது என்று கேள்வி கேட்டேன். இதில் என்ன தவறு என்று கேட்டார்கள். அதற்கு நான், அதில் எந்த தப்பும் கிடையாது;

ஆனால் தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டது போல், தமிழ்த் தாய் வாழ்த்தையும் இரண்டு அல்லது மூன்று முறை ஒலிக்க வைக்க வேண்டியதுதானே என்று கேள்வி கேட்டேன். அதற்கு எந்தவிதமான பதிலும் கிடையாது. அதற்கு கலைஞர் படத்திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவர் வந்தபோது நீங்கள் போட்டீர்கள் என்று சொல்கிறார். முதல்வருக்கு இந்தப் புரோட்டகால் கூட தெரியாமல் இருப்பது வருத்தமானது. குடியரசு தலைவருக்கு ஒரு புரோட்டாகால் இருக்கிறது. ஆனால், ஆளுநருக்கு அப்படியெல்லாம் கிடையாது.

நான் முதல்வன் திட்டத்தால் 41 லட்சத்திற்கும் மேல் மாணவர்கள் பயன்பெற்று இருக்கிறார்கள், அதை ஏன் முடக்கி உள்ளீர்கள் என்று கேட்ட கேள்விக்கு, ஆதாரம் இல்லாமல் இஷ்டத்திற்கு, முறையான பதில் இல்லாமல் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள். மின்வெட்டு தொடர்பான கேள்விக்கு மீண்டும் அவகாசம் கேட்கிறார்கள். அதிலும் திமுக மீது பழிபோடுகிறார்கள். எந்தவிதமான கேள்விக்கும் தெளிவான பதில் இல்லை.

பயிர் கடன் தள்ளுபடி தொடர்பாக விவசாயிகள் போராடுவது குறித்துக் கேட்டால், விவசாயிகளை திமுக தூண்டி விட்டுப் போராட்டத்தில் ஈடுபடச் சொல்கிறார்கள் என்று விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி இருக்கிறார் முதல்வர். இன்றைக்குக் கூட திருவள்ளூரில் விவசாயிகள் போராட்டம் நடத்தி உள்ளார்கள். சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்பான கேள்விக்கும் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என்று சொல்கிறார்கள். நீங்கள் ஏன் டிஜிபியை நியமிக்கவில்லை என்று கேட்கிறார்கள், சரி நாங்கள் செய்யவில்லை.

அதுதான் மக்கள் உங்களை தேர்ந்தெடுத்து விட்டார்களே; மாற்றம் என்று சொன்னீர்களே, ஒரே நாளில் கிழித்து எறிந்து விடுவோம் என்று சொன்னீர்களே, ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே எல்லாவற்றையும் மாற்றுவோம் என்று சொன்னீர்களே, இப்போது இந்த 40 நாளில் உங்கள் காவல்துறை எதைக் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் எங்களின் கேள்வி. ஒவ்வொரு நாளும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது; ஒரே நாளில் 24 சம்பவங்கள் நடந்துள்ளது.

ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களே அனைத்து குற்றத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான ஆதாரத்தை நான் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன். நாங்கள் யார் தயவிலும் இல்லை என்கிறார்கள். அப்படி இல்லையென்றால் ஆட்சி அமைந்த உடன் ஏன் அதிமுகவின் ஒரு பிரிவை மட்டும் சென்று சந்தித்தார். முதலில் சோபா சென்றது, பிறகு இவர் சென்றார். ஒவ்வொரு கட்சித் தலைவரை சந்திக்கும் போதும் புது சோபா சென்றது. இப்போது, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தலைமைச் செயலகத்தில் அமைச்சரின் அறையிலேயே சென்று கட்சியில் இணைகிறார்கள்.

ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினராக இழுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படி டயலாக்கை மனப்பாடம் செய்துவிட்டு வந்து ஒப்பித்துவிட்டுப் போவாரோ அதுபோல முதலமைச்சரின் உரை அமைந்துள்ளது. ஆடியோ, ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சிகளில் குட்டிக் கதை சொல்வதுதான் அவரது பாணி. சட்டமன்றத்தைக் கிட்டத்தட்ட ஒரு சினிமா தியேட்டர் போன்று மாற்றிவிட்டார். சட்டசபையே பார்க்காத வகையில் விசில் எல்லாம் அடிக்கத் தொடங்கி விட்டார்கள்.

இன்னும் சில நாட்களில் அமைச்சர்கள் டான்ஸ் ஆட ஆரம்பித்து விடுவார்கள் என நினைக்கிறேன். ஐட்டம் சாங் எல்லாம் போடுவார்கள் என்று நினைக்கிறேன். முழுக்க முழுக்க சமூக வலைதளங்களில் ரிலீஸ் ட்ரெண்ட் ஆக வேண்டும் என்பதற்காகப் பேசுகிறார். இன்றைக்கு முதலமைச்சர் அரைமணி நேரம் பேசியதில் ஒரு 10 ரீல் தேரும். எல்லாவற்றையும் திட்டமிட்டு தான் செய்கிறார்கள். எதிர்பார்த்ததுதான்; ஆனால் ஒரு அளவிற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இங்கேயும் நடிக்க ஆரம்பித்து விட்டார், மிகவும் செயற்கை தனமாகப் பேசுகிறார். செய்கை எல்லாம் காட்டுகிறார். சபாநாயகர் இனிமேல் ஆக்சன் கட் எல்லாம் சொல்வார் என நினைக்கிறேன். ஒன்ஸ் மோரெல்லாம் போவார்கள் என்று நினைக்கிறேன். சபாநாயகரிடம் நான் ஆக்சன் செய்யலாமா என்று கேட்கிறார்; அவரும் ஆக்சன் சொல்கிறார். இனிமேல் இங்கு கேரவன், மேக்கப், ஸ்டண்ட் மாஸ்டர்கள் எல்லாம் வந்து விடுவார்கள் என நினைக்கிறேன். சட்டமன்றத்தை ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.

ஊழல் செய்ததற்கு என்ன ஆதாரம் இருக்கிறது. நீதிமன்றத்திற்குச் செல்லுங்கள்; நாங்கள் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். பிரசாரக் கூட்டத்தில் பேசுவது போன்று சட்டசபையில் பேசிக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் இஷ்டத்திற்கு பேசுவதை நாங்கள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமா? பத்திரிகையாளர்களிடம் திட்டிக் கெட்டவார்த்தை எல்லாம் பேசினால், நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா? உங்களுக்கு கோபம் வந்து ஏன் இப்படிப் பேசுகிறீர்கள் என்று கேட்பீர்கள் தானே.

உங்களிடம் பேசுவதற்கு என்று ஒருமுறை உள்ளது. அவர்தான் பத்திரிகையாளர்களை பார்த்தாலே ஓடுகிறார். சினிமா ஷூட்டிங்தான் நடக்கிறது. சினிமா இயக்குநர் ஒருவர் தேவைப்படுவதால் சபாநாயகர் இயக்குநராக இருக்கிறார். துணை இயக்குநராக அமைச்சர்களும் துணை சபாநாயகரும் இருக்கிறார்கள். நாங்கள் எல்லாம் பேசி முடித்த பிறகு சபாநாயகர் அவை நேரம் முடிந்துவிட்டது என்று சொல்லிவிட்டார். நாங்கள் எல்லாம் கிளம்பிவிட்டோம். வீட்டுக்குச் சென்று டிவியில் பார்த்தால் அமைச்சர் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

போன் செய்து கேட்டால் நீங்கள் சென்ற பிறகு அவர் பேச ஆரம்பித்து விட்டார் என்று சொல்கிறார்கள். இதுபோன்று காமெடி டைமாகச் சபையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பார்ட்டி ஃபண்ட் குறித்து பேசுகிறார்கள், எந்த பார்ட்டி வாங்கியது, யார் யாருக்குக் கொடுத்தார்கள் என்ற ஆதாரம் இருக்கிறதா? ஆதாரம் இருந்தால் பதில் சொல்லலாம். இது தொடர்பாக அதிமுக ஏன் அமைதியாக இருந்தது என அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.

இரண்டு மூன்று நாட்களாக ஒத்திகை பார்த்துவிட்டு முதலமைச்சர் வந்திருக்கிறார். ஆக்சன் சொன்னதும் முழுவதுமாக நடித்துக் காட்டிவிட்டார். தேர்தல் வாக்குறுதிகள் சொன்னது தொடர்பான எந்த கேள்விக்கும் எதைப்பற்றியும் பதில் அளிக்கவில்லை. குறிப்பாக வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித் தொகை, மகளிர் உரிமைத்தொகை, ஆறு காஸ் சிலிண்டர்கள் என எந்த தேர்தல் வாக்குறுதியைப் பற்றியும் அவர் பேசவில்லை.

திமுக ஆட்சியின் திட்டங்களான மகளிர் உதவித்தொகை ரூ.1000 உள்ளிட்ட திட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வேறு எந்தப் புதுத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை. சிங்கப்பெண் என்று சொல்லி ஒன்று ஆரம்பித்தார்கள். இப்போது அவர்களும் முதலமைச்சர் பாணியில் ரிலீஸ் போட ஆரம்பித்துவிட்டார்கள். இந்த ஆட்சி கேலிக்கூத்து ஆட்சியாக, சினிமா ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது.

Related Stories: