சட்டப்பேரவையில் சைகை காட்டிய முதல்வர் விஜய் தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளின் இன்றைய நிலையை காட்டுறாரோ? எஸ்.எஸ்.சிவசங்கர் விமர்சனம்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியதாவது: ஆளுநர் உரை மீதான விவாதத்தின் பதிலுரையில் முதல்வர் விஜய், ஒரு முதலமைச்சர் பொறுப்பிற்கான தகுதியோடு நடந்து கொள்ளவில்லை. விவசாயிகள் போராட்டத்தை திமுக தூண்டிவிடுகிறது என்று சொன்னார். இன்னும் திமுக போராட்டக் களத்திற்கு வரவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் விவசாயிகள் பிரச்னைக்காக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

அது திமுக தூண்டிவிட்டதா? கள எதார்த்தம் புரியாமல் தனக்கு எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்ட்டை மட்டும் பேசுகிறார். அப்பா குறித்து குட்டி கதை சொல்றார். ஆனால், அவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், ‘என்னுடைய மகன் என் கட்டுப்பாட்டில் இல்லை, புஸ்ஸி ஆனந்த் கட்டுப்பாட்டில் இருக்கிறார்’ என்று வெளிப்படையாகப் பேட்டி கொடுத்திருக்கிறார். ‘கணவனைக் காணவில்லை’ என்று மனைவி செங்கல்பட்டு கோர்ட்டிலே வழக்கு தொடுத்திருக்கிறார். அப்பாவை காணாமல் மகனும் மகளும் தவித்து போயிருக்கிறார்கள்.

நீங்க அதெல்லாம் விட்டுட்டு அடுத்தவங்க அப்பா கதை சொல்றீங்க. முதலில் உங்கள் குடும்பத்தை நீங்கள் பாருங்கள், அடுத்தவர்களைக் குறை சொல்வதை அப்புறம் வைத்துக் கொள்ளலாம். முதல்வர் அவருடைய ஆக்ஷன் ஹீரோ திறமையை வேறு காட்டினார். சைகை செய்கிறார்; அதற்குப் பேரவை தலைவரிடம் அனுமதி கேட்கிறார். திமுக தலைவர் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்தது என்பதற்கு காட்டிய சைகையைக் காட்டுகிறார்.

அப்ப உங்களுக்கும் வி.எஸ். பாபுக்கும் என்ன வித்தியாசம்? வி.எஸ். பாபு கேட்டகிரி தானே நீங்களும்? தமிழ்நாட்டில் இருக்கின்ற பெண் குழந்தைகளுக்கு இன்றைக்கு என்ன நிலைமையோ அதைதான் அவர் சைகை காட்டுறார் என நினைக்கிறேன். அவருடைய உயர்கல்வித் துறை அமைச்சர் டான்ஸ் ஆடியதால், சட்டப்பேரவையில் முதல்வர் நடந்து கொண்டதால் மாண்பு போனது என்பதைத்தான் தன்னுடைய சைகை மூலமாக காட்டிவிட்டு உட்கார்ந்திருக்கிறார்.

பக்கத்து மாநிலத்தில் ஒரே ஒரு மரணத்திற்கு அல்லு அர்ஜுன் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன் நேராக அங்கே போகவில்லை. ஆனால் 41 பேர் இறந்த இடத்தில் நின்றவர் இவர்தான். எங்க முதல்வர் அவர் மீது குறையே சொல்லவில்லை. எங்க முதலமைச்சர் கருணையோடு நடந்து கொண்டதால்தான் இன்றைக்கு இந்தப் பேச்செல்லாம் பேசுகிறார்.

Related Stories: