நகராட்சி நிர்வாக துறையில் பணியாளர் நியமன விவகாரம் லஞ்ச ஒழிப்பு துறை தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடந்த ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாக துறையில், 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக கூறி அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யாததையடுத்து, அதிமுக எம்பி. இன்பதுரை தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

அதேபோல வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி திமுக ஆட்சியில் அரசு தரப்பிலும், முன்னாள் அமைச்சர் நேரு தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. நீதிமன்ற அவமதிப்பு, மறு ஆய்வு மனு நிலுவையில் இருந்த சூழலில், லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக நேரு தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கின் மீது ஜூன் 23ம் தேதிவரை மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. நேருவின் சகோதரர் உள்ளிட்டோர் தரப்பிலும், வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்பப் பெறக்கோரி மனு செய்துள்ளதாக தெரிவித்தார்.

அதற்கு, கே.என்.நேரு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முந்தைய அரசு எடுத்த நிலைப்பாட்டுக்கு மாறாக தற்போதைய அரசு எடுத்துள்ள நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. பிரதான வழக்கில் தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று ஆட்சேபம் தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணையையும், திமுக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை வாபஸ் பெற அனுமதி கோரி தற்போதைய அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையையும் ஜூலை 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதுவரை இந்த வழக்கின் மீது மேல் நடவடிக்கை எடுக்க கூடாது என்ற இடைக்கால உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டனர்.

Related Stories: