சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 1058 விரிவுரையாளர் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக, கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழகம் முழுவதும் தேர்வு நடத்தியது. தேர்வு முடிவு செப்டம்பர் 7ம் தேதி வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து பொறியியல் அல்லாத 5 பாடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்காக தேர்ச்சி பெற்ற 2,110 மாணவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். அப்போது 200 பேர் போலி மதிப்பெண்களுடன் தகுதி பெற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திய போது, போலி மதிப்பெண்கள் வழங்க ஒவ்வொரு விண்ணப்பதாரர்களிடமும் ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை இடைத்தரகர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. டெல்லியை சேர்ந்த தனியார் ஏஜென்சி நிறுவன ஊழியர்கள் ஓஎம்ஆர் விடைத்தாள்களை திருத்தி மதிப்பெண்களை மாற்றி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மோசடியாக தேர்ச்சி பெற்ற 196 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதை தொடர்ந்து அமலாக்கத்துறை தனியாக விசாரணையை தொடங்கி உள்ளது. சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய 18 இடங்களில் நேற்று காலை முதல் இரவு வரை மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர்கள் பாதுகாப்புடன் ஈடி சோதனை நடத்தியது. சென்னையில் வியாசர்பாடி பி.வி.காலனி 18வது தெருவில் வசித்து வரும் கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்க துணை பொதுச்செயலாளராக உள்ள விநாயகமூர்த்தி என்பவரின் வீட்டிற்கு அதிகாரிகள் வந்தனர்.
ஆனால் அவர் வீட்டில் இல்லாததால், பெரவள்ளூர் எஸ்.ஆர்.பி. காலனி 14வது தெருவில் வசித்து வரும் அவரது சகோதரர் சுபாஷ் வீட்டில் சோதனை நடத்தினர். திருமங்கலம் எச் பிளாக் 5வது தெருவைச் சேர்ந்த செந்தில்குமார், ரெட்டேரியை அடுத்த கிருஷ்ணா நகர் தொழிலதிபர் ரகுபதியின் வீடு உள்ளிட்ட 4 இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கல்வித்துறை சங்க நிர்வாகிகள் மற்றும் பயிற்சி நடத்திய நிறுவனங்களில் இந்த சோதனையை நடத்தினர்.
* திருச்சி புரோக்கரிடம் விசாரணை
லால்குடி அருகே ஆங்கரை பகுதியில் உள்ள எஸ்.எம். நகரை சேர்ந்தவர் கிறிஸ்துராஜ் (48). இவர் மீதும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில், தேர்வில் வெற்றி பெற வைத்து வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.50 கோடி வரை சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது தெரியவந்தது. நேற்று காலை 8 மணிக்கு கிறிஸ்துராஜ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
அதிகாரிகள் கூறுகையில், ‘‘20 ஆண்டுகளாக கிறிஸ்துராஜ் கணினி பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறார். 2017ம் ஆண்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கியதாக தெரிகிறது. லால்குடி மற்றும் திருச்சி பகுதிகளில் கிறிஸ்துராஜ் முக்கிய நபராக இருந்து வந்துள்ளார். எனவே, அவர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். முறைகேடு தொடர்பாக முக்கிய ஆவணங்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது’’ என்றனர்.
