குன்னூர் விநாயகர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்ட திட்டமிட்டது ஏன்? முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு விளக்கம்

சென்னை: சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நேற்று முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஊட்டியில் உள்ள 52 கோயில்களுக்கும் நான் ஐந்து நாள் முழுமையாக ஆய்வினை மேற்கொண்டேன். அந்த இடம் 10,000 சதுரஅடி, விநாயகர் கோயிலுக்கு சொந்தமான இடம். அந்த இடத்தில் நகராட்சியும் ஏற்கனவே கார் பார்க்கிங், மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டுவதற்கு தேவை என்று கூறியிருந்தது.

அந்தவகையில் இடத்தை ஆய்வு செய்து, அன்றைய சட்டப்பேரவை உறுப்பினராகவும் அந்த மாவட்டத்தினுடைய அமைச்சராகவும் இருந்த ராமச்சந்திரன் கோரிக்கை வைத்ததற்கு இணங்க அதை பரிசீலித்து, இந்த கோயிலுக்கு தேவைப்படுகின்ற நிதியை மருதமலை கோயிலிலிருந்து கடனாகப் பெறுவதற்கு அதிகாரிகள் பரிந்துரை செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதில் எங்கு என்ன தவறு நடந்தது. குன்னூர் சுற்றுலாப் பகுதி, தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்ற பகுதி.

அந்தப் பகுதியிலே வாகனம் நிற்பதற்குக் கூட இடங்கள் இல்லாத ஒரு சூழல். கோயிலுக்கு வருகின்ற பக்தர்கள் பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல், அங்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளுடைய பயன்பாட்டிற்கு அந்த மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டிக் கொடுக்கப்பட்டால், அதில் நிர்ணயிக்கப்படுகின்ற அந்த கட்டணத்தை வைத்து, ஊட்டியிலே இருக்கின்ற 52 கோயில்களின் அடிப்படை தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும் என்ற தொலைநோக்கு பார்வை கடந்த திராவிட மாடல் ஆட்சியிலே தொடங்கப்பட்டது.

அதை முழுமையாக உணராமல், புரியாமல் ஒரு அமைச்சர் அவசர கதியில் பேசுகிறார். ஆகவே, இதன் பிறகாவது, அந்த திட்டம் ஏன் கொண்டு வரப்பட்டது என உணர வேண்டும். 500 பேர் கோயிலுக்கு வருவதற்காக அல்ல. 5000க்கும் மேற்பட்டவர்கள், 50,000க்கும் மேற்பட்டவர்கள், லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விடுமுறை காலங்களில், கோடை காலங்களில் பயணிகளாக, சுற்றுலாப் பயணிகளாக வருபவர்களுக்கு தான் அந்த கார் பார்க்கிங் ஏற்படுத்தப்பட்டதே தவிர, வெறும் கோயிலுக்கு வருபவர்களுக்கு மட்டுமல்ல.

சட்டமன்றத்தை பொறுத்தவரையில், முழு விளக்கம் கிடைக்கும் அல்லது அமைச்சர்கள் கூறிய கருத்திற்கு எதிர்கருத்து வாதம் சரியாக இருக்கும் என்றால் எப்போதுமே அனுமதி தர மாட்டார்கள், அனுமதி மறுப்பார்கள். அதுதான் நேற்றைக்கு முழுமையாக அனுமதி மறுக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் ஆளுமையோடு அனைத்தையும் பதிவு செய்திருக்கின்றார். அவர் பேசுவதற்கு உண்டான வாய்ப்பை முழுமையாக நல்கி இருந்தால், நிச்சயமாக அங்கேயே பேசியிருப்பார், அங்கேயே அதற்கு தகுந்த பதிலடி தந்திருப்பார்.

கடந்த காலங்களில் பல்வேறு முதல்வர்கள் பேசுகின்ற பொழுது எதிர்க்கட்சித் தலைவர் குறுக்கீட்டை எல்லா சபாநாயகர்களும் அனுமதிப்பார்கள். அதேபோல் எதிர்க்கட்சியினர் குறுக்கீடுகளை முதலமைச்சர்களும் ஏற்றுக்கொண்டு, அவருடைய குறுக்கீடுகளை கேட்டு அதற்கு விளக்கம் அளிப்பார்கள். ஆனால், இவர் தயாரித்ததை தவிர வேறு எதையும் பேசுகிற நிலை இல்லாததால் சபாநாயகர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை.

Related Stories: