சென்னை: 26 காலிப்பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட உள்ள குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கு ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: துணை ஆட்சியர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், பத்திரப்பதிவு மாவட்ட பதிவாளர், தொழிலாளர் உதவி ஆணையர் ஆகிய பதவிகளில் 26 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 30ம் தேதி தொடங்கி ஜூலை 29ம் தேதி முடிவடையும். முதல்நிலை தேர்வு செப்டம்பர் 6ம் தேதி அன்று நடைபெறும். குரூப்1 தேர்வை பட்டதாரிகள் எழுத தகுதியுடையவர்கள். வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 34 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் (பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி) ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு (பொதுப்பிரிவு அனைத்து பிரிவினர்) வயது வரம்பில் 10 ஆண்டுகள் தளர்வு உண்டு. தேர்வு முறை, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வு கட்டணம், தேர்வு மையம் உள்ளிட்ட முழு விவரங்களையும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
