சென்னை: அமெரிக்க சுதந்திரத்தின் 250வது ஆண்டை கொண்டாடுவதற்காக சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் ஜூன் 22 (திங்கட்கிழமை) மாலை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் தூதர் கோர் பேசுகையில், \\”சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் அமெரிக்க அரசுக்காக இங்கு பணியாற்றும் ஒவ்வொரு அமெரிக்கரும், இந்தியா முழுவதும் உள்ள அனைவருடனும் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம்.
உங்களுடன் இணைந்து பணியாற்றவும், இந்த உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் நாங்கள் விரும்புகிறோம்\\” என்று கூறினார். சென்னைக்கான அமெரிக்க துணைத் தூதர் மரியானா எல். நெய்ஷுலர் மற்றும் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமெரிக்கா-இந்தியா இடையிலான உறவின் ஆழத்தையும், நவீன தொழில்நுட்பங்கள், பொறியியல் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் இன்னும் வலுவான ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளையும் எடுத்துரைத்தனர்.
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பவுண்டேஷனை சேர்ந்த சன்ஷைன் ஆர்கெஸ்ட்ரா குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் விழாவில் இடம்பெற்றன. அலிஷா மேத்யூ தயில் அமெரிக்க மற்றும் இந்திய தேசிய கீதங்களை பாடினார். மேலும், ‘விண்வெளி அனுபவக் கற்றல் மையம்’ (Space Experiential Learning Center) நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.
சென்னையில் உள்ள அமெரிக்க மையத்தில் அடுத்த மாதம் முதல் பொதுமக்களின் பார்வைக்கு இது திறந்திருக்கும். அமெரிக்காவின் இந்த முக்கிய மைல்கல் தினத்தைக் கொண்டாடும் விதமாக, அமெரிக்க கொடியை குறிக்கும் சிவப்பு, வெள்ளை மற்றும் நீல நிற விளக்குகளால் ரிப்பன் மாளிகை அலங்கரிக்கப்பட்டு ஒளிரவிடப்பட்டது.
