உதிரும் இலைகள் குப்பைக்கு தான் செல்லும் சுயலாபத்திற்கு அதிமுகவில் இருந்து விலகும் துரோகிகள்: திருப்புவனத்தில் போஸ்டர்

திருப்புவனம்: அதிமுகவில் இருந்து விலகி செல்பவர்களை கண்டித்து திருப்புவனத்தில் ஒட்டப்பட்டுள்ள கண்டன போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. இதனால் 47 எம்எல்ஏக்களுடன் மூன்றாம் இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டது. சட்டமன்ற தோல்விக்கும், தொடர்ந்து அதிமுக தோல்வியடைந்து வருவதற்கும், அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியே காரணம் என குற்றம்சாட்டி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட 5 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். ராஜினாமா செய்த நான்கு எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்த நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் சில நிபந்தனைகளுடன் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் மாவட்ட அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி நிர்வாகி மணிமாறன் சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அந்த போஸ்டர்களில், ‘‘அதிமுகவில் இருந்து சுயலாபத்திற்காக விலகிச் செல்லும் துரோகிகளை வன்மையாக கண்டிக்கிறோம். இலைகள் உதிர்வது பற்றி அதிமுக என்ற ஆலமரம் கவலைப்படுவதில்லை. இன்று மரியாதை கிடைக்கலாம். நாளை குப்பைக்கு தான் செல்லும்…’’ என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர்களால் திருப்புவனம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: