சென்னை: ஆளுநர் உரைக்கு பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் பேசியதாவது :
தவெக அரசு பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் ஆளுநர் உரை இது என்பதால், பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று பொதுமக்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஆட்சிக்கு வரும் முன்பு போதைப்பொருள் தடுப்பு, பெண்களுக்குப் பாதுகாப்பு மற்றும் சட்டம்- ஒழுங்கு நிலைநாட்டப்படும் என முதலமைச்சர் வீரவசனம் பேசினார். ஆனால், தற்போதைய தினசரி நிகழ்வுகள் அதிர்ச்சியளிக்கின்றன.
த.வெ.க ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 38 நாட்களில் மட்டும் சிறுகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக 150 போக்சோ வழக்குகள், 126 பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என மொத்தம் 276 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இந்த 38 நாட்களில் மட்டும் 130 கொலைகள் நடந்துள்ளன. பெண்களின் பாதுகாப்புக்காக ‘சிங்கப் பெண் சிறப்புப் படை’ ஒன்றை இந்த அரசு அறிவித்தது. ஆனால், அந்த சிறப்புப் படைக்கே பாதுகாப்பு அளிக்க மற்றொரு படை அமைக்க வேண்டிய அவல நிலையே இன்று தமிழகத்தில் நிலவுகிறது. அந்த அளவுக்கு சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. தேர்தல் நேரத்தில் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளையும் இந்த அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை.
அமைச்சரவைக் கூட்டத்தில் சுமார் 436 திட்டங்கள் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. எந்தெந்த மாவட்டங்களுக்கு, எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற எந்தவொரு விவரமும் இந்த ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை. தேர்தல் நேரத்தில், பெண்களுக்கு ரூ.2,500 உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை ரூ.3,000 ஆக உயர்வு, ஆண்டுக்கு 6 இலவச எரிவாயு சிலிண்டர்கள், திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் தாய்மாமன் சீர், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை, மாதம் ஒருமுறை மின் கட்டணக் கணக்கீடு போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி த.வெ.க ஆட்சிக்கு வந்துள்ளது. அதுபற்றியும் அறிவிப்பு இல்லை.
தமிழகத்தில் தற்போதைய அரசின் நிர்வாகக் கோளாறுகள் காரணமாகவே தொடர் மின்தடை ஏற்பட்டு வருகிறது. மக்கள் பயன்பாடு எவ்வளவு, மற்றும் அவற்றுக்கு இடையேயான இடைவெளி எவ்வளவு என்பதை ஆராய்ந்து, தேவையான மின்சாரத்தைக் கொள்முதல் செய்து மக்களுக்கு தடையற்ற மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்தது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். அதிமுக தலைமை சரியில்லை என்று கூறுவது தவறானது. அதிமுக தலைமை சரியாக இருந்ததால்தான் அவர் தேர்தலில் வெற்றி பெற முடிந்தது. நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், கட்சியின் செல்வாக்கு மற்றும் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி தலைவர்களின் கடுமையான உழைப்பின் காரணமாகவே விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார். அதை விடுத்து, தற்போது ராஜினாமா செய்தவர்கள் வாக்களித்த மக்களையும், தங்களின் வெற்றிக்காக உழைத்த தொண்டர்களையும் மதிக்கவில்லை என்றே அர்த்தம். எதிர்காலத்தில் இதற்கான பலனை அவர்கள் அனுபவிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
எனது மகன் மிதுன் எந்த காலத்திலும் அரசியலுக்கு வரமாட்டார்
எடப்பாடி பழனிசாமி தனது மகனை அரசியலுக்கு கொண்டு வந்து அவரது வாரிசாக நியமிக்க திட்டமிட்டுள்ளார் என அதிமுக அதிருப்தி எம்எல்ஏ சி.வி.சண்முகத்தின் குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்து பேசியதாவது, ‘அதிமுகவில் எனது மகன் மிதுன் அரசியல் வருகை குறித்து ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை. எனது மகன் மிதுன், அதிமுகவில் ஒரு சாதாரண அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருக்கிறார். கட்சியில் அவர் எந்தப் பதவியிலும் இல்லை. அவர் எதிர்காலத்திலும் அரசியலுக்கு வரமாட்டார்’ என்றார்.
