கட்சி மாறி வாக்களித்ததால் ஜார்க்கண்ட் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி: பா.ஜ ஆதரவு சுயேட்சை வேட்பாளர் வெற்றி

ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்எல்ஏக்கள் சிலர் கட்சி மாறி வாக்களித்ததால் பாஜ ஆதரவு சுயேச்சை வேட்பாளர் பரிமல் நத்வானி வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்தார்.

நாடு முழுவதும் 27 இடங்களுக்கு அறிவிக்கப்பட்ட மாநிலங்களவை தேர்தலில் 24 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். எஞ்சிய 3 இடங்களுக்கு (ஜார்க்கண்ட்டில் 2, மிசோரமில் 1) நேற்று தேர்தல் நடந்தது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) வேட்பாளர் பைத்யநாத் ராம், காங்கிரசின் பிரணவ் ஜா களமிறக்கப்பட்டனர். பிரணாவை எதிர்த்து பாஜ தலைமையிலான என்டிஏ கூட்டணியின் ஆதரவில் சுயேச்சை வேட்பாளர் பரிமல் நத்வானி களமிறங்கினார்.

81 எம்எல்ஏக்கள் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில், ஆளும் ஜேஎம்எம், காங்கிரஸ் அடங்கிய இந்தியா கூட்டணிக்கு 56 எம்எல்ஏக்களும், பாஜவின் என்டிஏ கூட்டணிக்கு 24 எம்எல்ஏக்களும் உள்ளனர். மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற 28 வாக்குகள் தேவை என்பதால் என்டிஏ கூட்டணி 4 வாக்குகள் குறைவாக கொண்டுள்ளது. எனவே, காங்கிரஸ் வேட்பாளர் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று மாலை முடிவுகள் வெளியாகின.

இதில், ஜேஎம்எம் வேட்பாளர் பைத்யநாத் ராம் 30 வாக்குகளுடன் வெற்றி பெற்ற நிலையில், பாஜ ஆதரவு சுயேச்சை வேட்பாளர் பரிமல் நத்வானி 28 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் பிரணவ் 20 வாக்குகளுடன் தோல்வி அடைந்தார். இதன் மூலம் இந்தியா கூட்டணியில் சில எம்எல்ஏக்கள் கட்சி மாறி சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, 2 எம்பி இடங்களிலும் போட்டியிட ஜேஎம்எம் கட்சி விரும்பியது. ஆனால், அதன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தன்னிச்சையாக தனது வேட்பாளரை அறிவித்தது. இது ஜேஎம்எம் கட்சிக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் ஒருவழியாக காங்கிரஸ் சமாதானம் பேசி சரி கட்டியது. இதன் காரணமாகவே ஜேஎம்எம் கட்சியினர் காங்கிரசுக்கு வாக்களிக்காமல் பாஜ ஆதரவு வேட்பாளருக்கு கட்சி மாறி வாக்களித்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தியா கூட்டணியில் கடுமையான விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் மேலும் சிக்கலை உருவாக்கி உள்ளது.

Related Stories: