தங்க முலாம் பூசிய தகரமாகவே உள்ளது உழைக்கும் மக்களின் எதிர்பார்ப்பு குறித்து ஒரு வார்த்தைகூட ஆளுநர் உரையில் இல்லை: அரசியல் கட்சி தலைவர்கள் அதிருப்தி

சென்னை: உழைக்கும் மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து ஒரு வார்த்தை கூட ஆளுநர் உரையில் இல்லை. இது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்று மு.வீரபாண்டியன் கூறியுள்ளார்.

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்) :
புதிய தொழில் கொள்கை அறிவிக்கப்படும், தொழில் வணிகம் எளிமையாக்கப்படும் என உறுதியளிக்கும் ஆளுநர் உரையில், தொழிலாளர் நலன், சட்ட உரிமைகள், கண்ணியமான வாழ்வுக்கான ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து ஒரு வார்த்தை கூட ஆளுநர் உரையில் இல்லை. விபி ஜி ராம் ஜி திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மீது ஆளுநர் உரை கவனம் செலுத்தாது ஊரகப்பகுதி உழைக்கும் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏமாற்றம் அளித்துள்ளது என கூறியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி: தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஊக்குவித்தல், கனிமவளக் கொள்ளையை தடுத்தல் ஆகியவற்றுக்கான நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் உரையில் வெளியாகியுள்ள அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில், தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. பெரும்பான்மையான அறிவிப்புகள் மேலோட்டமாகவே உள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம்: ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நிதி பகிர்வை அளித்திட சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதுடன் சட்ட வல்லுநர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்படும் என்று அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். சாதி வாரி இட ஒதுக்கீடு என்பது ஏற்கத்தக்கதல்ல. அது சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்குவதாக அமையும். ஆசிரியர்கள் பணிகளை நிரந்தரப்படுத்துவதற்கும், ஆசிரியர் கல்வி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்குவதற்கும் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து ஏதும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமின்முன் அன்சாரி: முந்தைய ‘திராவிட மாடல்’ அரசின் கொள்கைகளையே ஆளுநர் உரை வழிமொழிந்துள்ளது. திராவிட இயக்க அரசியல் தத்துவத்தை தாண்டி இவர்களால் வேறு எந்த திசையிலும் செல்ல முடியாது என்பதை தான் ஆளுநரின் உரை காட்டுகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்துப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், மாநில அரசு தனது உரையில் அதனை ஒன்றிய அரசின் பக்கம் தள்ளியுள்ளது.

வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்):
சமூக நீதியை நிலைநாட்டவும், தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கைதான் நீடிக்கும் என்று அறுதியிட்டு கூறியிருப்பதும், மாநில உரிமைகளுக்காக ஓங்கி குரல் கொடுக்கவும், நதிநீர் உரிமைகளை பாதுகாக்கவும் தமிழக வெற்றிக்கழக அரசு தொடர்ந்து பாடுபடும் என்று அழுத்தம் திருத்தமாக ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார். ஒன்றிய அரசு நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டி வரும் நிலையில் நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தவெக அரசு முனைப்பாக இருக்கிறது. பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும், போதைக் கலாச்சாரம் முற்றிலும் ஒழிக்கப்படும். இந்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு சமூக நீதி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் போன்ற அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இடம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

டிடிவி.தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்):
மாநில உரிமை, பெண்களின் நலன் மற்றும் பாதுகாப்பு, சமூக நீதி, சமவாய்ப்பு, மாற்றுத்திறனாளிகள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், திருநங்கையர் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோரின் நலன், கல்வி, மருத்துவம் மற்றும் சுகாதாரம் உள்ளடக்கிய ஆட்சி என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, தவெக அரசால் தயாரிக்கப்பட்ட ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் உரை, தங்க முலாம் பூசப்பட்ட தகரமாகவே அமைந்திருக்கிறது. கொத்து கொத்தாக அரங்கேறும் கொலை, கொள்ளைச் சம்பவங்களும், நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களுமே தவெகவின் கடந்த ஒரு மாத கால ஆட்சியின் அடையாளமாக மாறியிருக்கும் நிலையில், “பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதும், அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதுமே இந்த அரசின் லட்சியம்” என ஆளுநர் உரையில் குறிப்பிட்டிருப்பது கேலிக்கூத்தானது. தமிழக மக்களுக்கு கொடுத்த நல்லாட்சியையும் பின்பற்றிட முன்வர வேண்டும் என தமிழக முதல்வர் விஜய்க்கு அறிவுறுத்தும் இந்நேரத்தில், இன்றைய அரசு தயாரித்த ஆளுநர் உரை தங்க முலாம் பூசிய தகரமாகவே இருந்தது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நெல்லை முபாரக் (எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர்:
மாநில உரிமைகளைக் காப்பதிலும், தமிழ் மொழி நலன், நிதி உரிமை, சுற்றுச்சூழல் மற்றும் தூய்மையான நிர்வாகத்தை உறுதி செய்வதிலும் இந்த ஆளுநர் உரை ஒரு நல்ல தொடக்கமாக தெரிகிறது. ஆனால், வெறும் கொள்கை பிரகடனங்கள் மட்டும் சாமானிய மக்களின் பசியையோ அல்லது பொருளாதார தேவைகளையோ தீர்த்துவிடாது. புதிய அரசு, ஆளுநர் உரையில் காட்டிய அதே வேகத்தை, தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் காட்ட வேண்டும். எதிர்வரும் முழுமையான பட்ஜெட்டிலாவது இந்த வாக்குறுதிகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு, திட்டங்கள் முறையாகத் தொடங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

Related Stories: