மும்பை: டெல்லியில் உத்தவ் சிவசேனா கட்சியைச் சேர்ந்த 6 எம்பிக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கடந்த 2022ம் ஆண்டு உத்தவ் தாக்கரே தலைமையிலான பிளவுபடாத சிவசேனா கட்சி, இரண்டாக உடைந்தது. உத்தவ் அமைச்சரவையில் இருந்த ஏக்நாத் ஷிண்டே பாஜவுடன் சேர்ந்து ஆட்சி அமைத்து முதல்வரானார். தற்போது மகாயுதி அரசில் துணை முதல்வராக இருக்கும் ஷிண்டே, உத்தவ் கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் சிலரை தங்கள் பக்கம் இழுக்க ‘ஆபரேஷன் டைகர்’ என்ற பெயரில் புது வியூகத்தை வகுத்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. எனவே உத்தவ் கட்சி மீண்டும் பிளவுபடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து உத்தவ் தாக்கரே ஒரு கூட்டத்தை கூட்டினார். அக்கூட்டத்தில் மொத்தமுள்ள 9 எம்.பி.க்களில் 4 பேர் மட்டுமே நேரில் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து, உத்தவ் கட்சி கொறடா மூலம் ஒரு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில், உத்தவ் கட்சி எம்பிக்கள் அனைவரும் டெல்லியில் நடைபெறும் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். அதில் பங்கேற்காத எம்பிக்களுக்கு எதிராக தகுதிநீக்க நடவடிக்கையும் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் டெல்லியில் உத்தவ் கட்சி எம்பிக்களின் நாடாளுமன்றக் குழு கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால் இக்கூட்டத்தில் 6 எம்பிக்கள் கலந்துக் கொள்ளவில்லை. எம்பிக்களின் இந்த செயலால் கடும் அதிருப்தி அடைந்த அக்கட்சி எம்பி சஞ்சய் ராவத், 6 எம்பிக்களையும் ‘துரோகிகள்’ என்று விமர்சித்தார். அவர்கள் அனைவரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பியுள்ளார். கூட்டத்திற்கு பிறகு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், ‘நாடாளுமன்றக் குழு கூட்டத்திற்கு எம்பிக்கள் வருகை தராமல் கட்சித் தலைமை மற்றும் கொறடாவின் உத்தரவுகளை மீறியுள்ளனர். மக்களவை எம்பிக்கள் 3 பேர் மட்டுமே கலந்துக் கொண்டனர். மற்ற 6 பேர், வருகை தராதது சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. எம்பிக்களுக்கு ஏற்கனவே ரூ.15 கோடி வழங்கப்பட்டிருந்தது. இப்போது கூடுதலாக ரூ.10 கோடி கொடுத்து, அவர்களை ராஜஸ்தானில் ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளனர்’ என்றார்.
அதிருப்தி எம்பிக்களுக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு
கட்சியை விட்டு விலகி வேறு அணிக்கு செல்ல முயற்சிப்பதாக கூறப்படும் 6 உத்தவ் கட்சி எம்பிக்களுக்கு அக்கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடமிருந்து மிரட்டல் விடுக்கப்படுவதால், அவர்களுக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பை மகாராஷ்டிரா காவல்துறை வழங்கியுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
