சென்னை: கடந்த 38 நாட்களில் மட்டும் சுமார் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள், 4 சாதிய ஆணவ கொலைகள் நடந்துள்ளது. அவர்கள் அறிவிப்பது எல்லாமே, திமுக அரசினுடைய திட்டங்கள் தான் என்றும், காப்பி பேஸ்ட் அரசாக, ஒரு ஸ்டிக்கர் அரசாக தான் செயல்படுகிறது. முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் முழுக்க முழுக்க ரீல்ஸ் வெறியில் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
தமிழக சட்டப்பேரவையின் முதல் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி:
ஆளுநர் உரை ஆளுங்கட்சியினர் `ரீல்ஸ்’ போடுவதற்கான கன்டென்ட் மெட்டீரியலாக உள்ளது. ஒலிம்பிக் மையங்கள், திறன் பயிற்சி மையங்கள், 69 சதவிகித இட ஒதுக்கீடு, இருமொழிக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கை- 2020 எதிர்ப்பு, நிலுவையில் இருக்கக்கூடிய கல்வி நிதி கேட்டுக் கோரிக்கை, வறுமையில்லா தமிழ்நாடு, உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி, சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை, கீழடி உள்ளிட்ட அகழாய்வுகள், இந்தியாவிலேயே அதிகமாக நகர்மயமான மாநிலம் தமிழ்நாடு’ இப்படி எங்கள் அரசின் திட்டங்கள், சாதனைகள், கோரிக்கைகளைத்தான் மீண்டும் இவர்கள் படித்திருக்கிறார்கள்.
இரண்டு, மூன்று இடங்களில் ஆளுநர் உரையில் `சென்ற அரசினுடைய நிர்வாகம் சரியில்லை’ என்று குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள், சொல்லியிருக்கிறார்கள். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இவர்கள் சொல்வது, அறிவிப்பது எல்லாமே எங்களுடைய திராவிட மாடல் அரசின் திட்டங்கள்தான், அதனுடைய நீட்சிதான். இந்த அரசு வெறும் ஒரு காப்பி பேஸ்ட் அரசாக, ஸ்டிக்கர் அரசாகத்தான் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், சுமார் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள், 4 சாதிய ஆணவப் படுகொலைகள் தமிழ்நாட்டில் நடந்திருக்கின்றன. ஆளுங்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், அவர்களின் கட்சியினரே அந்த குற்றங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையான பிரச்னைகளைப் பற்றி என்றைக்கு நம் முதலமைச்சர் வாயைத் திறப்பார் என்று கேட்பதற்காகத்தான், இன்றைக்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் ‘தயவு செய்து வாயைத் திறங்கள் சிஎம் சார், பதில் சொல்லுங்கள் சிஎம் சார்’ பேட்ஜை அணிந்து கொண்டு வந்திருக்கிறோம். எங்களின் எதிர்ப்பை, எங்களின் எண்ணங்களைத் தெரிவித்து இருக்கிறோம். அதிமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை எல்லாம், ஆட்சி அமைந்த நாளில் இருந்து இன்றைக்கு வரைக்கும் தன் ஆட்சியைப் காப்பாற்றிக் கொள்ள ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரையும் ‘பேனிக் பையிங்’ செய்துகொண்டிருக்கிறார் முதல்வர்.
மாற்றம் மாற்றம் என்று சொல்லி விட்டு இன்றைக்கு இந்த ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் இன்றைக்குப் பொதுமக்கள் என்னவென்று சொல்கிறார்கள்? இது மாற்றம் இல்லை. மாட்டிக்கொண்டோம் நாம் எல்லாம் சேர்ந்து இவர்களிடம் மாட்டிக்கொண்டோம் என்று புலம்ப வைத்திருக்கிறது இன்றைக்கு அமைந்திருக்கக்கூடிய இந்த அரசு. எனவே தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய குழந்தைகள், பெண்கள், விவசாயிகள் என்று யாருடைய பாதுகாப்புக்கும், எந்த ஒரு வலிமையான திட்டங்களும் புதிய ஆளுநர் உரையில் நிச்சயம் இல்லை. அதனால் கடந்த ஆட்சியின் மேல், காழ்ப்புணர்வை மட்டுமே வெளிப்படுத்துகின்ற இந்த ஆளுநர் உரையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
தவெகவுக்கும், பாஜவிற்கும் ஒரு பெரிய அண்டர்ஸ்டாண்டிங்
உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டியில், “கடந்த ஐந்து வருடத்தில் ஒரு முறை கூட ஆளுநர் திமுக அரசு கொடுத்திருக்கக்கூடிய உரையை முழுமையாகப் படித்ததே கிடையாது. மாற்றம் செய்வார். ஆனால் மாற்றம் செய்யும்போது அப்பொழுது இருந்த எங்கள் முதல்வர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். ஆனால் இந்த முறை பார்த்தீர்கள் என்றால், ரொம்ப அபூர்வமாக முழு உரையும் ஒரு வார்த்தை, ஒரு கமா, ஒரு புல் ஸ்டாப் கூட எடுக்காமல் வாசிக்கும் போதே, உங்களுக்குத் தெரியும். நம் ஆட்சியாளர்களுக்கும், தமிழக வெற்றிக் கழகத்தாருக்கும், பா.ஜ.விற்கும் ஒரு பெரிய அண்டர்ஸ்டாண்டிங் வந்துவிட்டதோ என்கிற சந்தேகம் எங்களுக்கு வந்திருக்கிறது” என்றார்.
சட்டப்பேரவையில் மிகப்பெரிய ஆச்சரியங்கள்
உதயநிதி ஸ்டாலின் பேட்டியில், “சட்டப்பேரவையில் மிகப்பெரிய ஆச்சரியங்கள், அதிசயங்கள் இப்போது இங்கே நடந்து கொண்டு இருக்கின்றன. மரபு மீறப்பட்டிருக்கிறது. திமுகஆட்சியில் எப்போதுமே தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும்தான் முதலில் வாசிக்கப்படும். முடியும் போது ஆளுநர் கிளம்புவதற்கு முன்பு தேசிய கீதம் ஒளிபரப்பப்படும். ஆனால் இந்த முறை இரண்டு முறை தேசிய கீதத்தை ஒளிபரப்பி இருக்கிறார்கள் என்றால், மீண்டும் சொல்கிறேன், பா.ஜ.கவும், இப்போது இருக்கக்கூடிய ஆட்சியாளர்களும், ஒரு அண்டர்ஸ்டாண்டிங்கிற்கு வந்திருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்” என்றார்.
