பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்பட்டதால் பரபரப்பு; ஆளுநரின் அழுத்தத்துக்கு பணிந்தது தவெக அரசு

சென்னை: தமிழ்நாட்டின் மரபை கடைபிடிக்காமல், பேரவையில் ஆளுநர் உரைக்கு முன்பாகவே தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதமும் இசைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் மூலம் ஆளுநரின் அழுத்தத்துக்கு தவெக அரசு பணிந்ததாக கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. தமிழக சட்டப் பேரவை தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைப்பதற்கான மெஜாரிட்டி கிடைக்காததால் திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி பொறுப்பை ஏற்றது. இந்நிலையில், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் முதல் முறையாக நேற்று காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் உரையுடன் தொடங்கியது.

இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்படுமா அல்லது தமிழ்நாட்டின் மரபுபடி தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால் கடந்த திமுக ஆட்சியின் போது ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தேசிய கீதத்துடனே பேரவை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் திமுக ஆட்சி தமிழ்நாட்டின் உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என்று கூறி முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, ஒவ்வொரு ஆண்டும் சட்டப் பேரவை கூட்டத் தொடரிலும் வழக்கம் போல் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை பாடியே தொடங்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கவர்னர் உரையை படிக்காமல் வந்த வேகத்திலேயே வெளி நடப்பு செய்வதையே நடைமுறையாக வைத்திருந்தார். இதனால் கடந்த திமுக அரசுக்கும், கவர்வனருக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடித்தது. ஆனாலும் திமுக அரசு ஒரு போதும் விட்டுக் கொடுக்காமல் ஒவ்வொரு ஆண்டு முதல் கூட்டத் தொடரிலும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குவதில் உறுதியாக இருந்தனர். பொதுவாக சட்டப் பேரவை தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து இசைப்பதும், ஆளுநர் அறிக்கை வாசித்த பிறகு முடிவில் தேசிய கீதம் இசைப்பதும் பேரவையில் மரபாக கடைபிடிக்கப்பப்படுகிறது. இந்த மரபை, தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு மாற்றுமா? கவர்னரின் விருப்பத்தை ஏற்று தேசிய கீதத்துடன் தொடங்குவார்களா என்ற பரபரப்பு மக்கள் மத்தியில் எழுந்தது. ஏனென்றால், ஆளுநர் பங்கேற்கும் அனைத்து கூட்டங்களின் தொடக்கத்திலும் முடிவிலும் வந்தே மாதரம் இசைப்பதை கட்டாயமாக்கி ஒன்றிய உள்துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.

இதை தொடர்ந்து. தவெக அமைச்சரவை பதவி ஏற்பு நிகழ்வுகளில் முதலில் வந்தே மாதரமும், 2வதாக தேசிய கீதமும், 3வதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. இதற்கு எதிர்கட்சிகள், அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை எழுப்பியிருந்தனர். அதனால், பேரவை கூடியுள்ள நிலையில் முதலில் பாடப் போவது தமிழ்த்தாய் வாழ்த்தா அல்லது தேசிய கீதமா? இந்த புதிய அரசு என்ன செய்யப் போகிறது என்ற பரபரப்பு எழுந்தது. இந்த நிலையில், நேற்று காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பேரவைக்கு வந்தார். அதை தொடர்ந்து கூட்டம் தொடங்கியதும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இதனால் கவர்னரின் அழுத்தத்தை எதிர்த்து தவெக அரசு செயல்பட்டுள்ளது என்று எண்ணிய நிலையில், அடுத்து உடனே யாரும் எதிர்பார்க்காத வகையில் 2வதாக தேசிய கீதம் பாடப்பட்டது அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.

அதுமட்டுமல்ல, வழக்கமாக பேரவை மரபு படி தேசிய கீதம் முடிவில் தான் பாடப்பட வேண்டும். ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அடுத்ததாக தேசிய கீதம் பாடப்பட்டது. கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. அதோடு, கூட்டம் முடிந்ததும் மீண்டும் தேசிய கீதம் பாடப்பட்டது. இதுபோன்ற புதிய மரபை புதிதாக பதவி ஏற்றுள்ள தவெக அரசு உருவாக்கி இருப்பது அரசியல் களத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. கவர்னரின் அழுத்தத்துக்கு தவெக அரசு பணிந்து விட்டதாகவும், பாஜ- தவெக இடையே அரசியல் இணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்கட்சிகள், அரசியல் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கடுமையாக விமர்சித்து வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: