கட்சியில் முறைகேடு, புகார்களை அடுத்து கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் தவெகவில் இணைந்தார்

சென்னை: கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் தவெகவில் இணைந்தார். பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைமை அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். சி.மகேந்திரன் எதற்கு கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகி, தவெகவில் இணைந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தேசியக் குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான சி.மகேந்திரன் கட்சிக்காக உழைக்காமல், கட்சியின் பெயரையும் பதவியையும் தனக்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்டார்.

கடந்த 2015ம் ஆண்டு உட்கட்சித் தேர்தலில் தோல்வியடைந்தார். அவர் மாநில செயலாளராக தேர்வு செய்யப்படவில்லை என்றாலும், கட்சியின் தேசியக் குழு (தேசிய நிர்வாகக் குழு) உறுப்பினராகவும், மாநில செயற்குழு உறுப்பினராகவும் தொடர்ந்தார். இது அகில இந்திய அளவில் மாநில செயலாளர் அந்தஸ்துக்கு இணையான ஒரு முக்கிய பொறுப்பாகும். இருப்பினும், அந்த காலகட்டத்திலிருந்தே அவரது செயல்பாடுகள் கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக இருந்தன. அவரது செயல்பாடு திருப்திகரமாக இல்லாததால், கட்சித் தலைமை அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தது.

கடந்த 2022-23ம் காலக்கட்டத்தில் கட்சியின் அதிகாரப்பூர்வமற்ற பதிப்பகமான நியூ செஞ்சுரி பதிப்பக நிறுவன உரிமையை கட்சித் தலைமைக்கு தெரியாமல் முறைகேடாக மாற்ற முயன்ற விவகாரத்தில் சி.மகேந்திரன் தான் முக்கிய மூளையாகச் செயல்பட்டுள்ளார். பதிப்பக நிறுவனத்தின் சேர்மனாக இருந்த கட்சியின் மிக மூத்த தலைவர் நல்லகண்ணு மற்றும் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான தா.பாண்டியன் ஆகியோரை ஏமாற்றி, அவர்களிடம் சி.மகேந்திரன் ரகசியமாக கையெழுத்து வாங்கியுள்ளார். அப்போதைய எம்.டி.யாக இருந்த சண்முகம் சரவணனுடன் கூட்டுச் சேர்ந்து, நல்லகண்ணு மற்றும் தா.பாண்டியன் ஆகியோருக்கு உண்மை நிலை தெரியாதவாறு ஏமாற்றி இந்த போர்ஜரி வேலை நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பதிப்பகத்தின் மொத்த அதிகாரத்தையும் தன்வசப்படுத்த சி.மகேந்திரன் திட்டமிட்டிருந்தார்.

இதன் தொடர்ச்சியாகவே, கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் மாநிலக்குழுக் கூட்டத்தில் சி.மகேந்திரனின் வாதங்கள் கேட்கப்பட்ட பின்னர், ஒருமனதாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த முடிவின்படி, அவர் வகித்து வந்த அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டு, உறுப்பினராக தரம் குறைக்கப்பட்டார். இதுமட்டுமல்லாமல் சி.மகேந்திரன் கம்யூனிஸ்ட் கட்சியில் உயர் பொறுப்புகளில் நீடித்திருந்த காலகட்டத்திலேயே, கட்சியின் கொள்கைகளுக்கும் விதிகளுக்கும் முரணாக தனியாக ஒரு இயக்கத்தை ஆரம்பித்துச் செயல்பட்டு வந்ததும் உட்கட்சி விசாரணையில் அம்பலமானது.

இவ்வளவு பெரிய முறைகேடுகள் மற்றும் கட்சித் துரோக நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்ட போதிலும் சி.மகேந்திரனின் தனிப்பட்ட பெயருக்கோ அல்லது கம்யூனிஸ்ட் கட்சியின் நற்பெயருக்கோ பொதுவெளியில் எந்தவித அவப்பெயரும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கட்சித் தலைமை மிகவும் கவனமாக இருந்தது. குறிப்பாக காவல் நிலையத்தில் கூட புகார் அளிக்காமல் கட்சிக்குள்ளே விசாரணை நடத்தி மகேந்திரனின் பெயரை பாதிக்காமல் பார்த்துக் கொண்டது. அவர் தவறை உணர்ந்து திருந்துவதற்கு பலமுறை கட்சித் தலைமை வாய்ப்புகளை வழங்கிய போதிலும், அதை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அவர் கட்சியின் எந்தவொரு ஆக்கப்பூர்வமான பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் முற்றிலும் ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து முற்றிலும் விலகி, தவெகவில் இணைந்து கொண்டார். கொள்கைப்பிடிப்பற்ற மற்றும் சுயநலம் சார்ந்த அவரது இந்த மாற்றத்தால் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்தவித தார்மீக அல்லது அரசியல் பாதிப்பும் இல்லை கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

Related Stories: