கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டமன்றத்திற்கு வந்த திமுக எம்எல்ஏக்கள் : “வாயை திறங்க சிஎம்” வாசகத்தோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்திற்கு வந்த திமுக எம்எல்ஏக்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர். பேரவை வளாகத்தில் “வாயை திறங்க சிஎம்” வாசகத்தோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ளது. புதிய அரசு பதவி ஏற்ற பின்னர், சட்டசபையின் முதல் கூட்டம் நேற்று நடந்தது. சட்டசபையின் முதல் கூட்டம் என்பதால், இந்த கூட்டத்தொடர் கவர்னர் அர்​லேகர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள், ‘‘வாயைத் திறங்க சிஎம்” என்ற வாசகம் அடங்கிய கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டமன்றத்திற்கு வந்தனர். மேலும் பதாகைகள் ஏந்தி சட்டமன்ற வளாகத்தில் கோஷம் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் ஈடுபட்டனர்.

அப்போது உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கதறல் கேட்குதா? என்ற வாசகம் அடங்கிய பதாகையை கையில் ஏந்தி இருந்தனர். அதேபோல் தூய சக்தி அல்ல துயர சக்தி. திரையில் நாயகன், தரையில் வில்லன்டா. ரீல்ஸ் இங்கே. ரியல் எங்கே? வாயில் ஏதாவது வருமா சிஎம். மாற்றம் அல்ல ஏமாற்றம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைகளில் ஏந்தி இருந்தனர். மேலும் வாயை திற. சிஎம் சார் வாயை திற. எங்கே போச்சு சிங்கப்பெண் படைகள் பாதுகாப்பு எல்லாம் எங்கே போச்சு.

சட்டம் ஒழுங்கு செத்து போச்சு. தமிழக முதல்வரே வாயை திறங்கள். கதறல் சத்தம் கேட்கலையா? பெண்களின் பாதுகாப்பு என்னாச்சு போன்ற கோஷங்களை தவெக அரசுக்கு எதிராக திமுக எம்எல்ஏக்கள் எழுப்பினர். அதோடு பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகளுக்கு நீதி வேண்டும் என்பதையும் திமுக எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர். திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்தில் நடத்திய போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: