சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற பெண்களுக்கு பாலியல் தொல்லை, கொலை உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை இன்று எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் அனல் பறக்கும் விவாதம் நடைபெறும்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று ஆளுநர் அர்லேகர் உரையாற்றினார். இதையடுத்து கூட்டம் முடிவடைந்தது. இன்று, 2வது நாள் சட்டப்பேரவை கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் பிரபலங்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். இதை தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு விவாதம் நடைபெறும்.
இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி, திமுக, அதிமுக, பாமக, பாஜ, தேமுதிக, மமக உள்ளிட்ட எதிர்க்கட்சி பிரமுகர்கள் பேசுவார்கள். முன்னதாக, நேரமில்லாத நேரத்தில் தமிழகத்தில் சமீபகாலமாக நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி பேசுவார்கள். அதன்படி, கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னையில் தமிழக காவல் துறை மெத்தன போக்குடன் நடந்து கொள்கிறது, முக்கியமான பிரச்னைகளுக்கு முதல்வர் விஜய் பதில் அளிக்காமல் மவுனம் காத்து வருகிறார் என்று திமுக, அதிமுக, பாஜ உள்ளிட்ட கட்சி தலைவர்கள் புகார் கூறி வருகிறார்கள். குறிப்பாக திருவள்ளூரில் 3 வயது குழந்தை பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற பிரச்னைகளை இன்று சட்டப்பேரவையில் எழுப்ப திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இன்று முதல் 3 நாட்கள் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டம் தமிழக மக்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
