டிசி தர பணம் வாங்கிய தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

 

செங்கோட்டை: தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் எஸ்.ஆர்.எம். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் ஒன்றாம் வகுப்பு பிளஸ் 2 வகுப்பு வரை உள்ளது. மிகவும் பிரபலமான இப்பள்ளியில் செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் சமீபத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி ெபற்ற மாணவிகள் தங்களது மாற்றுச் சான்றிதழ்களை வாங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது மாணவிகளிடம் டிசியை வழங்குவதற்கு தலைமை ஆசிரியை பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாணவிகளின் பெற்றோர் தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, தற்போது மாற்றுச்சான்றிதழ் பெற்ற பள்ளி மாணவிகள், அவரது பெற்றோரிடம் ரகசியமாக விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் பள்ளி தலைமை ஆசிரியை ஜீவா மீதான குற்றச்சாட்டு நிரூபணமானது. இதைதொடர்ந்து அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: