கொடுங்கையூரில் பரபரப்பு; ரேபிடோ பைக்கில் பயணித்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை

 

பெரம்பூர்: மேகாலயா மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண், சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியுள்ளார். இவர், செங்குன்றம் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கான பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று வேலை முடித்து சென்ட்ரல் பகுதியில் உள்ள அவரது தோழி வீட்டிற்கு சென்று விட்டு, ரேபிடோ செயலி மூலம் முன்பதிவு செய்தார். இரவு 9 மணி அளவில் ரேபிடோ பைக்கில் பயணம் செய்தார். சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர், பைக்கை ஓட்டியுள்ளார்.

பாரதி நகர் மேம்பாலம் அருகே வந்தபோது ரேபிடோ ஓட்டுனர், திடீரென பெண்ணுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்துள்ளார். உடனே அந்த பெண் சத்தம் போட்டதும், ரேபிடோ ஓட்டுனர், வண்டியை நிறுத்திவிட்டு அப்பெண்ணை இறக்கி, தாக்கி விட்டு தப்பி சென்றார். இதையடுத்து அப்பெண், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பைக்கின் பதிவு எண் மற்றும் அவரது மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை வைத்து இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையிலான போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: