சென்னை: வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து வாட்ஸ்அப் குழு மூலம் பாலியல் தொழில் செய்து வந்து 2 புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை பெரியமேடு பெரியண்ண மேஸ்திரி தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு அதிகளவில் வடமாநில வாலிபர்கள் வந்து ெசல்வதாக விபசார தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் யாஸ்மினுக்கு அப்பகுதி மக்களிடம் இருந்து புகார் வந்தது. அதன்படி விசாரணை நடத்த விபசார தடுப்பு பிரிவு (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் ஜெயவனிதா தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் அப்பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர்கள் பலர் வந்து சென்றது உறுதியானது. அதைதொடர்ந்து அதிரடியாக சம்பந்தப்பட்ட வீட்டிற்குள் நுழைந்து போலீசார் சோதனை நடத்திய போது, உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த விக்கி ஷைனி (33) மற்றும் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பகுதியை ேசர்ந்த ராகேஷ் சென் (31) ஆகியோர் பெரியமேடு பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து, வடமாநில தொழிலாளர்களை ஒன்றிணைத்து வாட்ஸ் அப் குழு மூலம் இளம்பெண்கள் புகைப்படத்தை அனுப்பி பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் அதிரடியாக 2 புரோக்கர்களையும் கைது செய்தனர்.
