கடலூர்: வாலிபர் இறந்த வழக்கில் விசாரணை நடத்திய போலீசார் போலி கிளினிக் நடத்திய தவெக பிரமுகரை அதிரடியாக கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு மின் நகரை சேர்ந்தவர் ஆனந்தபாபு (45). தவெக பிரமுகரான இவர் சேத்தியாத்தோப்பில் மெடிக்கல் வைத்துள்ளார். மேலும் மருத்துவம் படிக்காமலேயே, ஊசி போட்டு நோயாளிகளுக்கு மருத்துவமும் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே பு.ஆதனூர் கிராமத்தை சேர்ந்த மதியழகன் மகன் ராகுல் (24) என்பவர், பூச்சிமருந்து குடித்து உயிருக்கு போராடிய நிலையில், அவரை ஆனந்த்பாபு நடத்தும் மெடிக்கலுக்கு நேற்று உறவினர்கள் கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ராகுல் பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே ராகுலுக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படாததால்தான் அவர் இறந்து விட்டதாக பெற்றோர், உறவினர்கள் சேத்தியாத்தோப்பு போலீசில் நேற்றிரவு முறையிட்டனர். அதன்பேரில், விசாரணை நடத்திய போலீசார், ஆனந்த்பாபு மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இறந்த ராகுலின் உடல், சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. இச்சம்பவம் சேத்தியாத்தோப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
