பெண்ணிடம் அத்துமீறல்: ரேபிடோ ஓட்டுநர் கைது

பெரம்பூர்: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரேபிடோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். மேகாலயா மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண், கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, வேலைக்கு சென்று வருகிறார். இவர், நேற்று முன்தினம் வேலை முடித்துவிட்டு சென்ட்ரல் பகுதியில் உள்ள தோழி வீட்டிற்கு சென்றார். பின்னர், அங்கிருந்து வீட்டிற்கு செல்ல ரேபிடோ செயலி மூலம் பைக் டாக்சி பதிவு செய்து அதில் பயணித்தார்.

அப்போது, பைக் டாக்சி ஓட்டிய நபர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மேலும், பாலியல் தொல்லை செய்த மணலி நியூடவுன் பகுதியை சேர்ந்த ராபிடோ டிரைவர் கோபிநாத் (38) என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை;
பெரம்பூர்: அயனாவரம் பகுதியை சேர்ந்த 63 வயது மூதாட்டி, கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு புழுக்கம் காரணமாக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 3 மணியளவில் வீட்டில் புகுந்த மர்ம நபர், மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி அலறிக் கூச்சலிட்டார்.

இதையடுத்து, மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதுபற்றி மூதாட்டியின் கணவர் காவல் கட்டுப்பாட்டு அறையில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் அயனாவரம் காவல் நிலைய போலீசார் விசாரித்தனர். அதில், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த யோகேஷ் (33) என்பதும், நண்பர்களுடன் அயனாவரம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும், மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் உறுதியானது. அவரை கைது செய்தனர்.

Related Stories: