ராசிபுரம்: ராசிபுரம் அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வரும் பெண்ணிடம் துப்பாக்கி, கத்தியை காட்டி மிரட்டி 20 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த பட்டணம் அம்மன் கோயில் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம் மனைவி கலைச்செல்வி (58). சதாசிவம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
இவர்களது 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. இதனால், கலைச்செல்வி தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, ராசிபுரத்தில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டு, இரவு 8 மணியளவில் வீட்டிற்கு திரும்பிய கலைச்செல்வி, 8.45 மணியளவில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, டூவீலரில் முகமூடி அணிந்து வந்த இருவர் திடீரென வீட்டிற்குள் புகுந்தனர்.
அவர்கள் கலைச்செல்வியின் கழுத்தில் கத்தியை வைத்தும், துப்பாக்கியை காட்டி மிரட்டியும் அவர் அணிந்திருந்த 5 பவுன் நகை, வீட்டில் பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். அவர்கள் சென்ற பிறகு, கலைச்செல்வி தனது மகளுக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து கோவை சரக டிஐஜி சாமிநாதன், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். போலீசார் தனிப்படை அமைத்து முகமூடி கொள்ளையரை தேடி வருகின்றனர்.
