சேத்தியாத்தோப்பு: கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு மின் நகரை சேர்ந்தவர் ஆனந்தபாபு (45). தவெக பிரமுகரான இவர் சேத்தியாத்தோப்பில் மெடிக்கல் வைத்துள்ளார். மேலும், மருத்துவம் படிக்காமலே, மெடிக்கலிலேயே கிளினிக் போல நடத்தி ஊசி போட்டு நோயாளிகளுக்கு மருத்துவமும் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. பு.ஆதனூர் கிராமத்தை சேர்ந்த மதியழகன் மகன் ராகுல்(24) என்பவர், பூச்சிமருந்து குடித்து உயிருக்கு போராடிய நிலையில், அவரை ஆனந்தபாபு நடத்தும் மெடிக்கலுக்கு நேற்றுமுன்தினம் உறவினர்கள் கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ராகுல் உயிரிழந்தார். சரியான சிகிச்சை அளிக்கப்படாததால்தான் அவர் இறந்து விட்டதாக பெற்றோர், உறவினர்கள் சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தை நேற்றுமுன்தினம் இரவு முற்றுகையிட்டு புகார் அளித்தனர். அதன்பேரில், விசாரணை நடத்திய போலீசார், ஆனந்தபாபு மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் நேற்று ஆனந்தபாபு நடத்தி வரும் மெடிக்கலில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் இறந்த ராகுலின் உடல், சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. இச்சம்பவம் சேத்தியாத்தோப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
