சென்னை: புதிய கட்டிடத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று வேலைக்கு அழைத்து வீட்டின் படுக்கை அறையில் பெண் பூ வியாபாரியை கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு செய்த வீட்டின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் உஷா (33) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது கணவர் டீக்கடை ஒன்றியல் பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் நேற்று முன்தினம் காலை தனது பிள்ளைகளை அருகில் உள்ள பள்ளியில் விட்டுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இவரது வீட்டின் அருகே புதிய வீடு ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அந்த வீட்டின் உரிமையாளர் சந்திரமவுளி (55), உஷா வீட்டிற்கு வந்து, எனது வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு ரூ.500 தருவதாக கூறியுள்ளார்.
அதற்கு ஒப்புக்கொண்ட உஷா, சந்திரமவுளிடன் புதிய வீட்டிற்கு சென்றுள்ளார். புதிய வீட்டில் உள்ள படுக்கை அறையை உஷாவிடம் சுத்தம் செய் என்று கூறியுள்ளார். அதன்படி உஷாவும் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் உரிமையாளரான சந்திரமவுளி, திடீரென உஷாவை பின்பக்கமாக கட்டி பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத அவர், சந்திரமவுளிடம் இருந்து தப்பிக்க முயன்றார். அப்போது, சந்திரமவுளி தன்னுடன் உல்லாசமாக இருந்தால், அதிகளவில் பணம் தருவதாக கூறி கட்டாயப்படுத்தி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் உஷா உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளார். இதனால் அச்சமடைந்த சந்திரமவுளி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பூ வியாபாரி உஷா கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் சம்பவம் நடந்த தெருவில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்ததில் புதிய வீட்டின் உரிமையாளரான சூளைமேடு பகுதியை சேர்ந்த சந்திரமவுளி (54) என தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று சந்திரமவுளியை அதிரடியாக கைது செய்தனர்.
