பள்ளி மாணவிகளுக்கு காதல் டார்ச்சர்: கல்லூரி மாணவர் கைது

 

இடைப்பாடி: இடைப்பாடியில் அரசு பள்ளியில் படித்து வரும் 2 மாணவிகளை காதலிக்கும்படி கூறி, டார்ச்சர் செய்த கல்லூரி மாணவரை, போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம், இடைப்பாடியை சேர்ந்த தம்பதியின் 16 வயது மற்றும் 15 வயது மகள்கள், அரசு மகளிர் பள்ளியில் முறையே பிளஸ் 2, 10ம் வகுப்பு படித்து வருகின்றனர். தினமும் மாலையில் பள்ளி முடிந்ததும், இருவரும் வீட்டுக்கு நடந்து வருவது வழக்கம். இவர்களின் வீடு உள்ள தெருவில் வசிக்கும் உறவினரான கல்லூரி மாணவர் ஜீவானந்தம்(20) என்பவர், அந்த மாணவிகளை வழிமறித்து அடிக்கடி பேசி வந்துள்ளார். இதை ஜீவானந்தத்தின் தாயார் சாந்தி கண்டித்துள்ளார்.

ஆனால், அதையும் மீறி மாணவிகளை தொடர்ந்து சென்று பேச முயன்று வந்துள்ளார். இதனிடையே, ஜீவானந்தம் கடந்த சில வாரங்களாக அந்த மாணவிகளிடம் காதல் கடிதம் கொடுத்து, வாங்கிக் கொள்ளும்படி டார்ச்சர் செய்து வந்துள்ளார். இதனால் பயந்து போன மாணவிகளுக்கு, அவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர், இடைப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், ஜீவானந்தத்தை கைது செய்து, சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: