சேலத்தில் ஒரு பொள்ளாச்சி பயங்கரம்: 50 பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த தவெக பிரமுகர்

* விபசாரத்தில் ஈடுபடுத்திய கொடூரம், செல்போனில் 8000 வீடியோக்கள், இளம்பெண் பேசும் ஆடியோவால் பகீர்

சேலம்: சேலத்தில் 50 பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி தவெக பிரமுகர் பாலியல் தொல்லை கொடுத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் மீது புகார் கூறி இளம்ெபண் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் செல்போனில் 8,000 வீடியோக்கள் இருந்ததாக அவர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தவெக பிரமுகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலத்தை அடுத்த நெய்காரப்பட்டி புத்தூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ஊர் பொதுமக்கள் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன் சேலம் மாநகர போலீஸ் கமிஷனருக்கு ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், `புத்தூர் அக்ரஹாரம் பகுதியில் மளிகைக்கடை நடத்தி வரும் மணிகண்டன் என்பவர், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக், கூலிப் போன்ற புகையிலை பொருட்களை மக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் போலீசுக்கு தெரியாமல் விற்பனை செய்கிறார்.

இக்குற்றத்திற்காக ஏற்கனவே அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி, அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை, ஓசூர் போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தனை வழக்கு இருந்தும் தற்போதும் குட்கா உள்ளிட்ட போதை புகையிலை பொருட்களை தனியாக ஒரு தறிக்கூட வீட்டில் பேரலில் வைத்து விற்பனை செய்கிறார். இவர் இப்படி செய்வது போலீஸ் அதிகாரிகளுக்கும் நன்கு தெரியும். குறிப்பாக செவ்வாய்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர், இவரிடம் பெரும் தொகையை பெற்றுக்கொண்டு மறைமுக உதவி செய்து வருகிறார்.

மேலும் ஒரு அதிர்ச்சி தரும் செய்தி என்னவென்றால், இந்த மணிகண்டன் பல பெண்களை மிரட்டியும், ஏமாற்றியும், பணத்தாசை காட்டியும் பாலியல் உறவு வைத்துள்ளார். அவர், அப்பெண்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும்போது, தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து, அதை காட்டி மிரட்டி தொடர்ந்து உறவு வைத்துக்கொள்வதும், அப்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதும் சில மாதங்களுக்கு முன்பு தான் தெரியவந்தது.

அவ்வாறு அவர் பல பெண்களுடன் உடலுறவு வைத்து இருக்கும் வீடியோவை பென்-டிரைவ் மூலம் பதிவு செய்து, சேலம் மாநகர ஆணையருக்கு புகார் மனுவில் இணைத்து அனுப்பியும் உள்ளோம். தன்னுடைய தொழிலை சட்டத்திற்கு முரணாக செயல்படுத்தி வருவதோடு, பல பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்தும் உள்ளார். இவரது மிரட்டலுக்கு அஞ்சி பல பெண்கள் அவர் சொல்வதை போல நடந்து வருகிறார்கள்.

அதனால், இவரை பிடித்து விசாரித்து செல்போனில் பிடித்து வைத்துள்ள ஆபாச படங்களை கண்டுபிடித்து, பெண்களை காக்குமாறு ஊர் பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்,’’ எனக்கூறப்பட்டுள்ளது. இப்புகார் மனு வெளியாகியிருந்த நிலையில் நேற்று, சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் பேசும் ஆடியோவும் வெளியானது. அதில், நெய்காரப்பட்டி மணிகண்டன், தவெக பிரமுகராக இருப்பதாகவும், அவர் பல பெண்களை ஏமாற்றி, ஆபாச வீடியோ எடுத்து வைத்து மிரட்டுவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அப்பெண், தான் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறேன். ஒரு பெண்ணிடம் வட்டிக்கு பணம் வாங்கிய நிலையில், அந்த நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் சேலம் பால்மார்க்கெட் பகுதியில் சாலையோரம் டூவீலரில் நின்றபடி அழுது கொண்டிருந்தேன். அப்போது, என்னை சுற்றிச்சுற்றி வந்த ஒருவர், அருகில் வந்து ஏன் அழுகிறீர்கள் என பேச்சுக்கொடுத்தார். நானும் ஆறுதலாக கேட்கிறார் என நடந்ததை கூறினேன்.

அப்போது, தனக்கு தெரிந்த பைனான்சியர்கள் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மூலம் உதவுவதாகவும் தெரிவித்து, போன் நம்பரை வாங்கிக் கொண்டார். நான் வீட்டிற்கு சென்றதும், வீட்டிற்கு சென்று விட்டீர்களா என போன் செய்து பேசினார். பிறகு வாட்ஸ்அப் காலில் பலமுறை பேசினோம். என்னை ஓமலூர், மேட்டூர் பகுதிக்கு அழைத்துச் சென்று ஒன்றாக இருந்துள்ளார். போகும்போது ரூ.2 ஆயிரம், ரூ.5 ஆயிரம் தந்துள்ளார்.

ஓமலூரில் ஒரு அறையில் இருக்கும்போது, அவரது போனை வைத்துவிட்டு, பாத்ரூம் சென்றார். அப்போது, அதை எடுத்து கேலரியை பார்த்தேன். அங்கு 8 ஆயிரம் வீடியோக்கள் இருந்தது. நான் அவருடன் வாட்ஸ்அப் காலில் பேசிய ஆபாச வீடியோக்களை பார்த்ததும், உடனே அவை அனைத்தையும் அழித்துவிட்டேன். 50க்கும் மேற்பட்ட பெண்களுடன் அவர், உறவில் இருப்பது, வீடியோ காலில் ஆபாசமாக இருக்கும் நிலையில் பேசுவது போன்ற வீடியோக்கள் இருந்தன. இதை பார்த்தபிறகு அவரிடம் இருந்து விலகிவிட்டேன்.

கடந்த சில மாதங்களாக தொடர்பில் இல்லாமல் இருந்தநிலையில், சமீபத்தில் என்னை தொடர்பு கொண்டு ஏன் பழையபடி இருக்க மாட்டியா என மிரட்டினார். மேலும், தன்னுடன் பழகியது போல், தனது நண்பர்களுடனும் பழக வேண்டும் எனக்கூறினார், இல்லையென்றால் வீடியோக்களை வெளியிட்டு விடுவேன் எனவும் மிரட்டினார். என்னை போல் பலரையும் அவர் மிரட்டி வருகிறார். அதனால் அவர் மீது காவல்துறையிலும், முதல்வர் தனிப்பிரிவிலும் புகார் அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை இல்லை. அதனால் தற்போது கூறுகிறேன்.

இனி அவரால் எந்த பெண்ணும் பாதிக்கக்கூடாது என்பதற்காக இந்த புகாரை தெரிவிக்கிறேன், எனப்பேசியுள்ளார்.  இந்த ஆடியோ வெளியான நிலையில், சேலம் மாநகர கமிஷனர் அனில்குமார் கிரி உத்தரவின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணையில் இறங்கினர். தவெக பிரமுகர் மணிகண்டனின் வீட்டிற்கு சென்று, அவரை மடக்கி பிடித்தனர். பின்னர், ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று, செல்போனை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து பார்த்தபோது, 3 பெண்களுடன் அவர் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் இடம்பெற்றிருந்தது. மேலும் ஒரு பெண்ணுடன் வாட்ஸ்அப் வீடியோ காலில் நிர்வாணமாக நின்று பேசுவது போன்ற வீடியோவும் இருந்தது. இதையடுத்து அந்த வீடியோவில் இருக்கும் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரிடம் புகாரை பெற்று வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

இரவோடு இரவாக அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் 50 பெண்களின் ஆபாச வீடியோ இருப்பதாக தெரிவித்துள்ளதால், அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை ஒரு கும்பல் ஆபாச வீடியோ எடுத்து சீரழித்ததுபோல் சேலத்தில் தவெக பிரமுகர் ஆபாச வீடியோ எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

* தன்னுடன் பழகியது போல், தனது நண்பர்களுடனும் பழக வேண்டும் என தவெக பிரமுகர் கூறினார். இல்லையென்றால் வீடியோக்களை வெளியிட்டு விடுவேன் எனவும் மிரட்டினார். என்னை போல் பலரையும் அவர் மிரட்டி வருகிறார்.

Related Stories: