கடையநல்லூர்: தென்காசி மாவட்டம், கடையநல்லூரை அடுத்த கரடிகுளம் இந்திரா காலனியைச் சேர்ந்த ராமையா மகன் மாரிமுத்து (34). லாரி டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவு கரடிகுளத்தில் இருந்து பொய்கை செல்லும் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது கருப்பன் கோயில் முன்பு அவர், மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதில் தலை துண்டாகி தொங்கியது.
இதுபற்றி அந்த வழியாக சென்றவர்கள் கடையநல்லூர் போலீசிற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட மாரிமுத்துவின் அருகில் கிடந்த செல்போனை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர். இந்நிலையில் மாரிமுத்துவை கொலை செய்த குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உடலை எடுக்க விடாமல் அவரது உறவினர்களும், ஊர் பொதுமக்களும் நேற்று முன்தினம் இரவு 8 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை 4 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்தை மாரிமுத்துவின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தனிப்படையினர் அப்பகுதியைச் சேர்ந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகின்றனர். பெண் தொடர்பால் மாரிமுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இதனிடையே மாரிமுத்துவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
