வெளிநாடுகளில் இருந்து இயங்கும் ஆப்ஸ்கள்; கொடிகட்டி பறக்கும் ஐபிஎல் ஆன்லைன் சூதாட்டம்: கும்பலை கண்டுபிடிப்பதில் புலனாய்வு அமைப்புகளுக்கு தலைவலி

 

புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக ஆன்லைன் சூதாட்டம் நடத்தி கோடிக்கணக்கில் பணம் பறிக்கும் மோசடி நெட்வொர்க் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தற்போது நடந்து வரும் ஐபிஎல் சீசனில், டெலிகிராம் இணைப்புகள், வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் நேரடி விளம்பர அழைப்புகள் மூலம் ஆன்லைன் சூதாட்ட நெட்வொர்க்குகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதற்காகவே செயல்படும் சூதாட்ட கும்பல், ஆரம்பகட்ட போனஸ் சலுகைகள் மற்றும் எளிதான பதிவு முறைகளைக் காட்டி பயனர்களை ஆசை வார்த்தைகளால் கவர்கின்றனர். ஆன்லைனில் இன்ஸ்டால் செய்யப்படும் இந்த சூதாட்ட செயலிகள் சாதாரண கேமிங் ஆப்ஸ் போலவே காட்சியளித்தாலும், பின்னணியில் அதிநவீன பந்தய நெட்வொர்க்காகச் செயல்படுகின்றன.

இப்போது போட்டியின் முடிவு மட்டுமின்றி, ஒவ்வொரு பந்திலும் என்ன நடக்கும், அடுத்த விக்கெட் எப்போது விழும், ஒரு ஓவரில் எத்தனை ரன்கள் எடுக்கப்படும் என்பது போன்ற ‘மைக்ரோ-பெட்டிங்’ முறையில் மக்கள் பந்தயம் கட்ட ஊக்குவிக்கப்படுகிறார்கள். உள்ளூர் ஏஜெண்டுகள் மூலம் பணம் பெறப்பட்டு, ஆன்லைன் ஐடிகள் உருவாக்கப்பட்டு புள்ளிகளாக கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன. பெரும்பாலான செயலிகள் வெளிநாடுகளில் இருந்து இயங்குவதோடு, வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் பணப் பரிவர்த்தனைகள் கணக்கிடப்படுகின்றன. இந்த எளிதான பணத்தாசை காரணமாகப் பலர் தங்களது பணத்தை இழந்து, பெரும் கடன் பிரச்னைகளில் சிக்கித் தற்கொலை மற்றும் சைபர் குற்றங்களில் ஈடுபடும் அபாயமும் அதிகரித்துள்ளது.

சமீபத்தில் லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது ‘ஸ்கை லைவ் ப்ரோ’ மற்றும் ‘டாட்டா கால்குலேஷன் வெர்ஷன் 1.0’ போன்ற செயலிகளைப் பயன்படுத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை கிழக்கு மாவட்ட போலீசார் கைது செய்தனர். இது குறித்துப் பேசிய கிழக்கு மாவட்ட கூடுதல் துணை போலீசார் கமிஷனர் சிருஷ்டி பாண்டே, `முன்பெல்லாம் பணமும் மனிதர்களும் நேரில் இருந்தனர். ஆனால் தற்போது இந்த சூதாட்டம் மனிதர்களையும் பணத்தையும் தாண்டி டிஜிட்டல் உலகிற்குச் சென்றுவிட்டது. பல்வேறு வங்கி கணக்குகள் மூலம் கிரிப்டோகரன்சி மற்றும் பிட்காயினாக மாற்றப்படும் பணத்தை கண்டுபிடிப்பது பெரும் சவாலாக உள்ளது’ என்று தெரிவித்தார்.

மேலும், இது குறித்து சைபர் பாதுகாப்பு நிபுணர் பவன் துக்கல் கூறுகையில், `இந்திய சட்டப்படி ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த செயலிகள் வெளிநாடுகளில் இருந்து இயங்குவதாலும், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியப் புலனாய்வு அமைப்புகளுக்கு ஒத்துழைக்க மறுப்பதாலும் இவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது. எனவே, ஒன்றிய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டவிரோத சூதாட்ட தளங்களைத் தடுக்க புதிய டிஜிட்டல் வியூகங்களை வகுக்க வேண்டும்’ என்று எச்சரித்துள்ளார்.

Related Stories: