ஹமிர்பூர்: உத்தரபிரதேசத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் புயல் காற்று வீசியதால் இடிந்து விழுந்தது. இதில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ ஆட்சி செய்து வருகிறது. இங்கு ஹமிர்பூர் மாவட்ட தலைமையகத்தில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ள லால்புரா காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பர்சானி மற்றும் கந்தவுர் கிராமங்களுக்கிடையே பெட்வா ஆறு செல்கிறது.
இந்த ஆற்றின் மீது கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக புதிதாக பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று அதிகாலை பயங்கர சூறாவளி காற்று வீசியது. இந்த நேரத்தில் பாலம் கட்டுமான பணியில் இருந்த 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒரு ஸ்லாப் மீது தூங்கி கொண்டிருந்தனர். அப்போது பாலத்தின் ஒருபகுதி இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில் தூங்கி கொண்டிருந்த தொழிலாளர்கள் ஆற்றுக்குள் விழுந்தும், ஒரு தூணுக்கு அடியிலும் சிக்கி கொண்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு குழுவினர் துரிதமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தூணின் அடியில் சிக்கியிருந்த 3 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு ஹமிர்பூர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து அறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு முறையான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
* லக்னோ ரயில் நிலைய மேற்கூரை சரிந்து விபத்து
லக்னோவில் உள்ள சார்பக் ரயில் நிலையத்தில் புதுப்பித்தல் மற்றும் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இங்கு நேற்று காலை 8.15 மணிக்கு வழக்கம்போல் பயணிகள் ரயிலுக்காக காத்து கொண்டிருந்தனர். அப்போது ரயில் நிலையத்தின் 5வது பிளாட்பாரத்தில் மேற்கூரையின் ஒருபகுதி திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அங்கு நின்றிருந்த டிக்கெட் பரிசோதகர் அமித் மற்றும் பயணிகள் அகிலேஷ் மற்றும் சாஹில் ஆகியோர் காயமடைந்தனர்.
