திருவனந்தபுரம்: கேரளத்தில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், பள்ளி மாணவிகளுக்கு மாதத்தில் 3 நாட்கள் மாதவிடாய் விடுமுறை உள்பட புதிய திட்டங்களை நிறைவேற்ற அரசு தயாராக உள்ளதாக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் சட்டசபையில் நேற்று ஆற்றிய உரையில் குறிப்பிட்டார். கேரள சட்டசபையின் 16வது கூட்டத்தொடர் நேற்று கவர்னர் உரையுடன் தொடங்கியது.
கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரின் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு: இந்திரா கேரண்டி என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட 5 முக்கிய திட்டங்கள் நிறைவேற்றப்படும். அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000, ரூ. 3 ஆயிரம் நல ஓய்வூதியம், ரூ.25 லட்சத்திற்கான சுகாதார இன்சூரன்ஸ், இளைஞர்களுக்கு தொழில் தொடங்க ரூ. 5 லட்சம் வரை வட்டியில்லா கடன், முதியோருக்கு தனியாக ஒரு துறை ஆகிய 5 திட்டங்களை நிறைவேற்ற அரசு தயாராக உள்ளது.
பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் காலத்தில் மாதத்தில் 3 நாட்கள் விடுமுறை வழங்கப்படும். அரசு மற்றும் தனியார் துறைகளில் 6 மாத கட்டாய பிரசவ விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். கேரளாவின் 600.15 கி.மீ கடற்கரை, 44 ஆறுகள், 34 ஏரிகள் மற்றும் 4 சர்வதேச விமான நிலையங்களின் முழு திறனையும் பயன்படுத்தி ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். கேரளத்தை ஒரு துறைமுக முனையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கவர்னர் தன்னுடைய உரையில் குறிப்பிட்டார்.
* கவர்னருடன் சட்டசபைக்குள் வந்த டிஜிபியால் சர்ச்சை
சட்டசபையில் கவர்னர் உரையாற்ற வரும்போது அவருடன் முதல்வர், சபாநாயகர், தலைமைச் செயலாளர், சட்டசபைக்கான பொறுப்பு வகிக்கும் ஒரு அமைச்சர் ஆகியோர் மட்டுமே வரவேற்று அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால் நேற்று கேரள சட்டசபையில் கவர்னர் வரும்போது இவர்களுடன் டிஜிபி ரவடா சந்திரசேகரும் சட்டசபைக்கு வந்தார். இதை சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் பின்னர் சுட்டிக்காட்டினார். டிஜிபி தெரியாமல் வந்திருக்கலாம் என்று சபாநாயகர் பதில் கூறினார்.
* வந்தே மாதரம் பாடலை முழுமையாக இசைக்காததால் கவர்னர் அதிருப்தி
கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தொடக்கத்திலும், கடைசியிலும் வந்தே மாதரம் பாடவேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி நேற்று கேரள சட்டசபையில் கவர்னர் உரையாற்றுவதற்கு முன்பாக பேண்ட் மூலம் வந்தே மாதரம் இசைக்கப்பட்டது.
ஆனால் முழுமையாக இசைக்கப்படவில்லை. இது கவர்னருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. தன்னுடைய அதிருப்தியை சபாநாயகர் மற்றும் முதல்வருக்கு எழுத்து மூலம் தெரிவிக்க கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வந்தே மாதரத்தை முழுமையாக இசைக்காததற்கு கேரள மாநில பாஜ கண்டனம் தெரிவித்துள்ளது.
