ஜாமீன் வழக்கில் மறுநாளே உத்தரவு ஒத்தி வைக்கப்பட்ட தீர்ப்புகளை 3 மாதத்தில் வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி ஆணை

புதுடெல்லி: உயர் நீதிமன்றங்களில் பல்வேறு முக்கிய வழக்குகள் விசாரிக்கப்பட்டு அதன் தீர்ப்புகள் வெளியிடப்படாமல் காலம் தாழ்த்தப்படுகிறது. இதனால் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்கள் ஆகியோருக்கு மிகப்பெரிய சிரமங்கள் உருவாகிறது. குறிப்பாக ஜாமீன் கேட்ட வழக்குகளில் கூட தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட நிலையில் உத்தரவு பிறப்பிக்கப்படாமல் இருக்கும் சூழல் நீடித்து வருகிறது. மேற்கண்ட நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு நேற்று கால வரம்புடன் கூடிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதில்,\\” உயர் நீதிமன்றங்கள் வழக்கை விசாரித்து ஒத்தி வைக்கப்பட்ட தீர்ப்பை வழங்க காலதாமதம் செய்யக் கூடாது. குறிப்பாக ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்புகள் மூன்று மாதங்களுக்குள்ளாக உத்தரவாக வழங்கப்பட வேண்டும். அதேப்போன்று ஜாமீன் உத்தரவுகள் வழக்கு முடிந்த அடுத்த நாளே உத்தரவு வழங்கப்பட வேண்டும். அதேசமயம் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அதேநாளில் உத்தரவின் விவரம் குறித்து சிறை நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

மேலும் வழக்கில் விசாரணை கைதிகளாக சிறையில் இருப்பவர்கள் ஜாமீன் கிடைக்க பெற்றால் அன்றைய தினமே விடுவிக்கப்பட வேண்டும் அல்லது அதிகபட்சமாக அடுத்த நாளே சம்பந்தப்பட்ட நபரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும். குறிப்பாக வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் போது அதில் முக்கிய சாராம்சங்கள் நீதிமன்றத்திலேயே அறிவிக்கப்பட்டு அந்த உத்தரவு தொடர்பான விளக்கம் என்பது ஏழு நாட்களுக்குள்ளாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட தேதியை உயர்நீதிமன்ற இணையதளத்தில் இடம்பெற செய்ய வேண்டும். மேலும் வழக்கின் உத்தரவு அல்லது தீர்ப்பின் முழு விவரங்கள் முப்பது நாட்களுக்குள்ளாக பதிவேற்றம் செய்யப்படாவிட்டால் சம்பந்தப்பட்ட அந்த வழக்கை வேறொரு அமர்வுக்கு மாற்ற வேண்டும். இதைத்தவிர முக்கியமாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இந்த வழிகாட்டு உத்தரவை அனைத்து உயர்நீதிமன்றத்தின் பதிவாளர்கள் அந்தந்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

Related Stories: