பினராயி விஜயனின் வீட்டில் சோதனை நடத்தியதில் எனக்கு எந்த பங்கும் கிடையாது: முதல்வர் வி.டி. சதீசன் பேட்டி

திருவனந்தபுரம்: பினராயி விஜயனின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை என்று கேரள முதல்வர் வி.டி. சதீசன் கூறினார். கேரள முதல்வர் வி.டி. சதீசன் நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது: நான் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்த பின்னர்தான் பினராயி விஜயனின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது என்றும், இந்த சோதனைக்கு நான் தான் காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறி வருகின்றனர்.

சமீப காலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இதுபோல நகைச்சுவையாக பேசத் தொடங்கியுள்ளனர். நான் கேரளாவின் தேவைகளுக்காகத் தான் மோடியை சந்திக்க சென்றேன். பினராயி விஜயனின் மகள் மீது மத்திய விசாரணை அமைப்புதான் வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் கேரள அரசு தலையிட முடியாது. எப்படி விசாரணை நடத்த வேண்டும் என்று கேரள அரசு கூற முடியாது. அதற்கான அதிகாரமும் இல்லை.

அமலாக்கத்துறை அதிகாரிகளை தாக்கியது மிக மோசமான குற்றமாகும். சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய கடமை போலீசுக்கு உள்ளது. அமலாக்கத்துறை சோதனை குறித்து கேரள அரசிடம் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் ஆட்கள் திரண்டதால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் உடனடியாக அந்த இடத்திற்கு போலீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: