புதுடெல்லி: அரசு மற்றும் சில தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டு வகுப்புகள் வரை ஆசிரியராக பணியாற்ற, டெட் அதாவது ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இந்த நிலையில் சிறுபான்மை பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமா? என்பது குறித்தான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மனுக்கள் ஒரே வழக்காக விசாரிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில்,” ஆசிரியர்கள் பணியில் தொடர்ந்து நீடிக்கவும், அதேப்போன்று பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு அதாவது டெட் தேர்வு கட்டாயம். இருப்பினும் பல்வேறு சூழல்களை கருத்தில் கொண்டு ஓய்வு பெறும் வயதை அடைய ஐந்து ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்கள் பணியில் தொடரலாம். இருப்பினும் அதேநேரத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் கண்டிப்பாக தேர்வு பெற வேண்டும்.
இல்லையெனில் அவர்கள் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது இறுதி சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம். சிறுபான்மை நிறுவனங்களில் டெட் தேர்வை அரசு கட்டாயப்படுத்த முடியுமா?, அது அவர்களின் உரிமைகளை பாதிக்குமா? என்பது குறித்து விசாரிக்க அது தொடர்பான கோரிக்கை கொண்ட வழக்கை மட்டும் உச்ச நீதிமன்றத்தின் உயர் அமர்வுக்கு பரிந்துரைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து நீட் தேர்வு கட்டாயம் என்ற மேற்கண்ட உத்தரவுக்கு எதிராகவும், அதேப்போன்று தீர்ப்பில் ஒருசில நிவாரணங்கள் வேண்டும் என்றும், குறிப்பாக டெட் தேர்வு விவகாரம் என்பது மாநில அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டத எனக்கூறி தமிழ்நாடு அரசு தரப்பில் திமுக ஆட்சிபோது கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மறு ஆய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் வழங்கிய உத்தரவில்,” இந்த விவகாரத்தில் தமிழக தமிழக அரசின் மனுவை முழுமையாக தள்ளுபடி செய்ய முடியாது. இதில் முந்தைய உத்தரவில் சில நடைமுறை மாற்றங்களை மேற்கொள்கிறோம்.
அதன்படி ஆசிரியர்கள் டெட் தேர்வு எழுதி தகுதி பெற ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் என்பது தற்போது மூன்று ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது. மேலும், வரும் 2028ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் இந்தத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். இதற்கு மேல் எக்காரணம் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்தனர்.
