புதுடெல்லி: வருகின்ற 21ம் தேதி நடைபெற உள்ள நீட் மறுத்தேர்வில் வினாத்தாள் கசிவை தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற குழுவிடம் சிபிஐ மற்றும் அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே 3ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்த தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது தெரியவந்ததை அடுத்து இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இது குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வருகின்ற 21ம் தேதி நீட் மறுதேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் நீட் வினாத்தாள் கசிந்த வழக்கு விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும், இந்த கசிவுக்கு பின்னால் உள்ள அனைவரையும் கைது செய்வதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் நாடாளுமன்ற குழுவிடம் சிபிஐ இயக்குனர் பிரவீன் சூட் நேற்று விளக்கம் அளித்தார்.
மேலும் ஜூன் 21ம் தேதி நடைபெற இருக்கும் நீட் இளங்கலை மறுதேர்வில் எந்தவித வினாத்தாள் கசிவோ அல்லது முறைகேடோ நடைபெறாமல் தடுப்பதற்கும் தேர்வில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் நாடாளுமன்றத்தின் அரசு உறுதிமொழிகள் குழுவிடம் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
தேர்வு முகமையின் மூலம் தேர்வுகள் நடத்துவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அரசு அளித்த உறுதிமொழிகள் தொடர்பில், கல்வி அமைச்சகம், தேசிய தேர்வு முகமை, என்எம்சி மற்றும் சிபிஐ அதிகாரிகளை நேரில் ஆஜராகும்படி நாடாளுமன்ற குழு அமைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
