புதுடெல்லி : தமிழக விவசாயிகளின் உயிர்நாடியாக காவிரி ஆறு விளங்குகிறது. இதனை கருத்தில் கொண்டு தான், நீர் பங்கீடு பிரச்சனையை தீர்க்கும் விதமாக உச்ச நீதிமன்றத்தால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் காவிரியின் குறுக்கே ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா மேகதாது என்ற பகுதியில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடியில் புதிய தடுப்பணையை கட்ட கர்நாடக அரசு முயன்று வருகிறது.
இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை மறு ஆய்வு செய்ய கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவையும் உச்ச நீதிமன்றம் கடந்த இரு தினங்களுக்கு முன் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த சூழலில் மேகதாது அணை தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், மேகதாது அணை திட்டத்தால் லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்படும். இதனால் அப்பகுதியில் உள்ள வனவிலங்குகள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள், பாதுகாக்கப்பட்ட விலங்கினங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இவற்றை பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது.எனவே, மேகதாது அணையை கர்நாடக அரசு கட்ட திட்டமிட்டிருப்பதை சட்டவிரோதம் என்று அறிவித்து திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மேகதாது அணைக்கான உரிய சுற்றுச்சூழல் அனுமதி உட்பட எந்த அனுமதி வழங்கக்கூடாது.
அதேபோன்று அணைக்கான பூமி பூஜை உள்ளிட்ட எவ்வித நடவடிக் கைகளையும் எடுக்காமல் இருக்க கர்நாடக அரசு, காவிரி நீர் வாரி நிகம் நிறுவனத்துக்கு தடை விதிக்க வேண்டும். சுற்றுச் சூழல் விதிகளை மீறும் மேகதாது அணை திட்டத்துக்கு சூழல் அனுமதியை தர மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
